இந்தியாவில் கொரோனா பாதிப்பு 900ஐ கடந்துவிட்டது. 20 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களும் கொரோனா பாதிப்பில் 200ஐ நெருங்கிவிட்டன. கர்நாடகா மாநிலத்திலும் 80ஐ நெருங்கிவிட்டது கொரோனா பாதிப்பு.

தமிழ்நாட்டில் 40ஆக இருந்த கொரோனா பாதிப்பு 41ஆக உயர்ந்துள்ளதை உறுதி செய்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா, தமிழ்நாட்டில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 41ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் நாளை முதல் முடுக்கிவிடப்பட இருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டு ஏர்போர்ட்டுகளில் இறங்கியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அல்லாமல் வெளிமாநில ஏர்போர்ட்டுகளில் இறங்கி ட்ரெய்ன் அல்லது பஸ் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களின் லிஸ்ட் பெறப்பட்டு அவர்களும் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 10 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு இருந்த பகுதியை சுற்றிய 5 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளில் வசிப்போரையும் வீடு வீடாக சென்று பரிசோதிக்க உள்ளோம். 

50 வீட்டிற்கு ஒரு அதிகாரி என்ற வீதம், வீடு வீடாக சென்று, பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம். 60 வயதுக்கு அதிகமானவர்கள், இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல் இருப்பவர்கள் ஆகியோருக்கு முகக்கவசங்கள் வழங்கப்படுவதுடன், அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் முகக்கவசம் கொடுத்து தனிமைப்படுத்துவோம். மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உடல் உபாதைகள் ஏதேனும் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவர்கள் தவிர கடந்த 14 நாட்களில் வெளியே சென்று திரும்பியோரும் பரிசோதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் மனித உடலில் 14 நாட்கள் இருக்கும் என்பதால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை நாம் பரிசோதிக்கும்போது அறிகுறிகள் காட்டவில்லையென்றாலும், பின்னர் காட்டுவதற்கான வாய்ப்புள்ளதால் அவர்கள் தனிமைப்பட அறிவுறுத்தியுள்ளோம்.

தனிமைப்படுத்தப்பட்டதால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க மனநல கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனாவின் பாதிப்பு அதிகபட்சம் எவ்வளவு வரும் என்கிற கணக்கெடுப்பின் அடிப்படையில், சிறப்பு வார்டுகளையும் படுக்கை வசதிகளையும் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு அதிகப்படுத்தி கொண்டிருக்கிறோம் என்று பீலா தெரிவித்தார்.