Asianet News TamilAsianet News Tamil

ஆதிபகவனும் பரமாத்மாவும் ஒன்று தான்.. திருக்குறளில் அரசியல் பண்ணாதீங்க..ஒரே போடா போட்ட ஆளுநர்..

திருக்குறளின் முதல் குறலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதிபகவனும் ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள பரமாத்மாவும் ஒன்றுதான் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 

Tamil Nadu Governor RN Ravi Speech
Author
Coimbatore, First Published Jan 7, 2022, 9:51 PM IST

கோவையில் நடைபெற்ற உலகத்திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தொடங்கி வைத்தார். "கல்வெட்டில் திருக்குறள் 6" என்ற திருக்குறள் நூலினையும் அவர் வெளியிட்டார். மாநாட்டில் தலைமை உரையாற்றிய ஆளுநர், நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் உள்ளதாகவும் அதனை அரசியல் காரணங்களுக்காக சுருக்க கூடாது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

 மேலும் ”தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மீக பூமி. இங்கு சிறந்த மனிதர்கள் இருந்துள்ளார்கள். இந்த மண்ணில் திருவள்ளுவர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாராதி ஆகியோர் ஆன்மீகம் மூலம் இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் குறளில்  வரும் ஆதி பகவனும், ரிக் வேத்தில் வரும் பரமாத்மாவும் ஒன்று தான். திருக்குறள் ஆன்மீக கருத்துகளை பேசி இருக்கின்றது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான விடயங்களையும், ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் திருக்குறள் போதிக்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் மொழி மாற்றம் செய்யும் போது அதன் உள் அர்த்தம் மாறுவதை தவிர்க்க வேண்டும். ஆன்மீகம், பக்தி கொள்ள தனியாக காரணம் தேவையில்லை. நாம் எப்போதும் அறநெறிகளை கடைப்பிடிக்க வேண்டும். திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது. அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும, நிர்பந்தங்களுக்காகவும் அதை சுருக்க கூடாது” என்று பேசினார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், “தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தமிழில் படித்தால் வேலை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது. தமிழ் மொழியில் வளர்ச்சி எற்பட்டால் சமூகம் வளரும். இந்தியாவில் சில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை போல பிற மொழிகளுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்படுவது இல்லை. ஆங்கிலம் முதல் மொழியாக வைத்து, இரண்டாவது மொழியாக தமிழ் மொழியை வைத்து கற்க வேண்டும். தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

 முன்னதாக  உலக திருக்குறள் மாநாடு நிகழ்வில் கருப்பு வண்ண முக கவசம் அணிந்தோரின் முக கவசங்களை விட்டு அவர்களுக்கு வேறு வண்ண முக கவசம் வழங்கப்பட்டது. இதேபோல நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசிற்கு அனுப்பாத ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற தமிழ் புலிகள் அமைப்பினர் 5 பேரும், விசிகவினர் 3 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios