கவர்னரின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு, கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் சிறுமியர் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவர்னரின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு, கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் சிறுமியர் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டி இந்திய குடியரசுத் தலைவர், பாரதப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான முருகவேல் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் .

போதைப்பொருள் புழக்கம்

அதில், சமீப காலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் சீர்கெட்டு இருக்கிறது இது சம்பந்தமான அனைத்து விவரங்களும் தேசிய புலனாய்வு முகமையின் மூலம் தங்களுக்கு தெரிய படுத்தப்பட்டிருக்கும் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகவும், சிறுமிகளுக்கு எதிராகவும் பெருமளவு குற்றங்கள் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஏற்பட்டிருக்கிறது. மேலும் போதைப்பொருள் புழக்கம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது சாதாரண மக்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் குறிப்பாக கிராமப்புறம் வரை போதைப்பொருள் சர்வசாதாரணமாக கிடைக்கக் கூடிய சூழ்நிலை தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. அதை ஒப்புக் கொள்ளும் விதமாக தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் கஞ்சா 2.0 என்ற ஒரு சோதனையை மேற்கொண்டு அதன் மூலம் ஒரு மாதம் போதைப் பொருள் விற்கும் நபர்களை கைது செய்யவும் அந்த போதை பொருள் விற்பனையின் மூலம் பெறப்பட்ட, வாங்கப்பட்ட பொருட்களையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். 

பாலியல் குற்றங்கள்

அதன்மூலம் சிலருடைய பொருட்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களும், வன்புணர்வுகளும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் மூலம் தெரியப் படுத்தப் பட்டிருக்கிறது. மகளிரும் குழந்தைகளும் பெருமளவு அச்சத்தில் இருக்கிறார்கள் குறிப்பாக இரவு நேரங்களில் வேலை செய்யும் மகளிரும், பொதுமக்களும் வெளியே செல்வதற்கு அச்சமான ஒரு சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. குறிப்பிடும்படியாக பல சம்பவங்கள் கொள்ளை, கொலை, ஆதாயக் கொலை, சங்கிலி பறிப்பு, செல்பேசி பறிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைவை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

மேலும் போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களின் உடமைகளும், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய எந்தவிதமான புள்ளிவிவரங்களும் காவல்துறை, ஆளும் அரசால் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற குற்றச் செயல் புரிபவர்களும், திமுக அரசும் கைகோர்த்து செயல்படுவதால் வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை நிலவுவதாக அறிகிறோம்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதி

ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக பலவற்றை சொன்னாலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றியதாக தெரியவில்லை. முறையாக வரி செலுத்துபவர்களின் பணத்தை வைத்து ஆளும் அரசு சுகபோகமாக வாழ நினைக்கிறது, இந்த அரசு சாதி மத பேதமற்ற அரசு என்றும், ஜனநாயகமான அரசு என்றும் தன்னை பிரகடனப் படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் அதே வேளையில் அரசியல் லாபத்திற்காக இருவேறு குழுக்களிடையே துவேஷங்களை தூண்டும் விதமாகவும், மத பிரச்சினைகளை தூண்டும் விதமாகவும் அவர்களுடைய செயல்பாடு தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக காரணமே இல்லாமல் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல்

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த 19. 4. 2022 அன்று தமிழக ஆளுநர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்புகிற போது மயிலாடுதுறை பக்கத்தில் உள்ள மன்னம்பந்தல் என்ற கிராமத்திற்கு அருகே வருகிற போது சில சமூக விரோதிகள் ஒன்றுகூடி கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள் அப்போது மேதகு ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்ற வாகனங்களின் மீது கற்களையும், காலணிகளையும், கருப்பு கொடிகளையும் வீசி எறிந்து மிகப்பெரிய பதட்டத்தையும், மேதகு ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்ற விதமாக அந்த சமூக விரோதிகள் செயல்பட்டிருக்கிறார்கள். நல்வாய்ப்பாக மேதகு ஆளுநருக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் திரும்பியிருக்கிறார், மேதகு ஆளுநரின் நியமனம் மத்திய அரசாங்கத்தை சார்ந்ததாக இருந்தாலும் மேதகு ஆளுநரின் பாதுகாப்பு மத்திய மாநில அரசுகளை சார்ந்தது குறிப்பாக மேதகு ஆளுநர் மாநிலத்திற்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மாநில காவல்துறை தான் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

திமுக அரசின் மீது உரிய நடவடிக்கை 

நான் திடமாக நம்புவது மேதகு ஆளுநரின் மீதான இந்தத் தாக்குதல் இந்திய அரசியல் அமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக பார்க்கிறேன். இது ஆளும் திமுக அரசின் வன்மத்தையும், ஆளுநருக்கு எதிரான மனோபாவத்தையும் காட்டுகிறது இந்த தாக்குதலில் ஆளும் திமுக அரசு முழுமையாக செயல் இழந்து விட்டதாகத் தான் கருத முடியும். மேலும், சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க முடியாத ஒரு அரசாக தமிழக அரசு இருப்பதை இந்த நிகழ்வு புடம் போட்டு காட்டுகிறது. மாநிலத்தின் முதல் குடிமகனான ஆளுநரின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பில்லாத இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் வாழ்கின்ற சாமானிய மக்களுக்கு எந்த விதத்தில் இந்த அரசு பாதுகாப்பை வழங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டும், நடந்த சட்டவிரோத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உடனடியாக தாங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு திமுக அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக திமுக அரசு ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் முறையற்ற அரசியலைத் தான் கையிலெடுக்கும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து மாநில நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதை விடுத்து மக்களை திசை திருப்பும் விதமாக கொள்கை, இனம், மொழி, பண்பாடு, திராவிடம், இந்தி எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு என்ற தவறான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான நிலைப்பாட்டையே தொடர்ந்து திமுக எடுக்கும். அதன் வெளிப்பாடு அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது பாரதப்பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலூன்களை பறக்க விடுவதும், go back modi என்று கோஷம் இடுவது மாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு

நேற்றைய சம்பவம் முறையற்ற, எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத தமிழக மக்களின் மனதில் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மேதகு ஆளுநர் இன் சுற்றுப்பயண விபரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும், குறிப்பாக தமிழக காவல்துறைக்கு கட்டாயம் தெரிந்திருக்க கூடிய சுற்றுப்பயண விபரமாக இருக்கும், அதன் அடிப்படையில் காவல்துறை உரிய பாதுகாப்பை பலப்படுத்தி இருக்க வேண்டும். குறிப்பாக உளவுத்துறையின் தகவல்களை பெற்று யார் மூலமாக, எந்த இடங்களில் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து அதற்கு தகுந்தபடி பாதுகாப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும் ஆனால், நடந்து முடிந்த நிகழ்வுகளை ஒட்டி பார்க்கிற போது இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு சமூக விரோதிகளால் ஏற்படும் என்று தெரிந்தே காவல்துறை அனுமதி அளித்ததா அல்லது உளவுத்துறையின் செயலற்ற தன்மையை இது பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி இங்கே எழுகிறது. எனவே, உளவுத்துறையின் மீதும், கிடைக்கப்பெற்ற தகவலின் மீதும் உண்மை தன்மையை கொண்டுவர ஒரு விரிவான விசாரணை இந்த திமுக அரசின் மீது நடத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சமூக விரோதிகள்

இந்த சமூக விரோதிகளின் தாக்குதலில் திமுக பின்புலமாக இருக்கும் என்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இதில் கைகோர்த்து இருக்கும் என்றும் பரவலாக பேசப்பட கூடிய இந்த சூழ்நிலையில் மேதகு ஆளுநரின் பாதுகாப்பில் குறைபாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்க வேண்டும். அதன் அடிப்படையில் எடுக்கப் படக்கூடிய முடிவுகளுக்கும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மேலும் இந்த பதற்றமான நிகழ்வு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியிருக்கிறது, தமிழ்நாட்டை இந்திய அளவில் தலை குனிய வைத்து இருக்கக்கூடிய நிகழ்வாக இதை பார்க்கிறோம். ஆனால், இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளை உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யாமல் தற்காப்பு கைது என்ற அடிப்படையில் அவர்களை கைது செய்து மாலையில் விடுவிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய சமூக சீர்கேட்டை ஏற்படுத்த துணிந்த சமூக விரோதிகள் மீது தற்காப்பு கைது என்ற நடவடிக்கையை விட்டு அவர்களின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து தடுப்புக்காவலில் அவர்கள் அனைவரையும் அழைக்க வேண்டும் என்பதோடு இது ஒரு முன்னுதாரணமாக இனிவரும் காலங்களில் அமைய வேண்டும் என்றும் ஒரு கவர்னரின் பாதுகாப்பு குறைபாட்டால் அவர் சென்ற வாகனத்தின் மீதும் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களின் மீது கற்களையும், காலணிகளையும், கட்டைகளையும், கருப்புகொடிகளையும் எறிவது என்பது சாதாரணமாக ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. இது கடுமையான கண்ணோட்டத்தோடு பார்க்க கூடிய ஒரு நிகழ்வு.

அதிமுக புகார்

எனவே இந்திய நாட்டின் பிரஜை என்கிற முறையில் இந்த நிகழ்வை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவது என்னுடைய கடமை, இந்த நிகழ்வை சாதாரணமான ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக நாம் கடந்துவிட முடியாது, இது ஒரு தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக தான் பார்க்க வேண்டும் அதேபோல இந்திய அரசியலமைப்பு அமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக தான் பார்க்கவேண்டும். எனவே மேதகு குடியரசுத் தலைவரும், பாரத பிரதமரும், உள்துறை அமைச்சரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்திய அரசியலமைப்பு வழங்கி இருக்கக்கூடிய வழிமுறைகளின் படி திமுக அரசின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், நடந்துமுடிந்த இந்த வன்முறை வெறியாட்டத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.