தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 5 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. இன்று 5363 டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில், 49 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதுவரை தமிழ்நாட்டில் 29997 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையை எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக துரிதமாக முடிவை பெறக்கூடிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை 36 ஆயிரம் கருவிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. மொத்தம் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு தமிழ்நாடு ஆர்டர் செய்துள்ளது. 

ரேபிட் டெஸ்ட் கருவிகளின் மூலமாக ஒரு மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவை பெற முடியும். எனவே ரேபிட்  டெஸ்ட் கருவியின் மூலம் அதிகமானோருக்கு டெஸ்ட் செய்து முடிவை விரைவில் பெற முடியும் என்பதால் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆர்டர் செய்துள்ளது. மத்திய அரசு 15 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு ஆர்டர் செய்துள்ளது. 

இன்று தமிழ்நாட்டிற்கு வந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளின் மூலமாக சேலத்தில் பரிசோதனை செய்யப்படு முடிவுகள் பெறப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளை ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விமர்சித்துவரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலை எவ்வளவு? தமிழ்நாடு எத்தனை கருவிகளை வாங்கியுள்ளது? என்ற தகவலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயித்ததன் படி, ஒரு ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ.600க்கு வாங்கியிருப்பதாக தமிழ்நாடு மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.