Asianet News TamilAsianet News Tamil

ராமதாஸின் கோரிக்கைக்கு சட்டென செவி சாய்த்த தமிழக அரசு.. அப்படி என்ன தான் கேட்டாரு..!

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் கூட எந்தப் பயனும் கிடைக்காது. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து, புதிய சட்டம் இயற்றுவதுதான் சரியான தீர்வு ஆகும். 

Tamil Nadu Government listened to the request made by Ramadoss
Author
Tamil Nadu, First Published Aug 4, 2021, 2:28 PM IST

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து, புதிய சட்டம் இயற்ற வேண்டும் என ராமதாஸ் வைத்த  கோரிக்கைக்கு உடனே தமிழக அரசு செவிசாய்த்துள்ளது 

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதால், பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அவற்றைப் போக்கி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தமிழகத்துக்கு அண்மைக் காலங்களில் மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்தது ஆன்லைன் சூதாட்டங்கள்தான். குறைந்த காலத்தில் மிக அதிக வருவாய் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தையுடன் கூடிய மாய வலையை வீசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், அதில் மயங்கி சூதாட வரும் இளைஞர்களின் பணத்தை முற்றிலுமாகச் சுரண்டி, மீள முடியாத கடன் வலையில் சிக்க வைக்கின்றன.

Tamil Nadu Government listened to the request made by Ramadoss

கடன் வலையில் இருந்து மீள முடியாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டனர். அதைத் தடுக்க தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் எனக் கடந்த 4 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக, ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, கடந்த நவம்பர் 21-ம் நாள் அவசர சட்டத்தை அதிமுக அரசு பிறப்பித்தது. அதன்பின், கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிப்ரவரி 25-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அச்சட்டம் தான் செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கத்தை உயர் நீதிமன்றம் விமர்சிக்கவில்லை. அதன்மூலம், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது. மாறாக, சில நுட்பமான காரணங்களின் அடிப்படையில்தான் இந்தச் சட்டத்தைச் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு. அது சூதாட்டம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்து உள்ளது; சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் 'ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்' என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tamil Nadu Government listened to the request made by Ramadoss

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் திறன் சார்ந்த விளையாட்டுகள் என்பது அந்தப் போட்டிகளை நடத்தும் நிறுவனங்களின் வாதம். அதைப் பல தருணங்களில் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், ஆன்லைன் ரம்மி என்பது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு என்பதுதான் எதார்த்தம். இதை நீதிமன்றங்கள் உணரும் வகையில் போதிய ஆதாரங்கள், காரண, காரியங்களுடன் சட்டம் இயற்றப்பட்டால், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் என்பது பாமகவின் நம்பிக்கை. இதைத் தமிழக அரசு செய்ய வேண்டும்.

இரு மனிதர்கள் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி, அதில் ஒருவர் வெற்றி பெறும்போது, அதில் அதிர்ஷ்டம் இல்லை, திறமை மட்டுமே உள்ளது என்று கூறுவதில் நியாயம் உள்ளது. ஆனால், ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் அப்படி இல்லை. ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ஒருபுறத்தில் மனிதர்கள் ஆடினால், மறுபுறத்தில் ஆடுவது மனிதர்கள் அல்ல. மாறாக, மென்பொருட்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள். ஆன்லைன் ரம்மி விளையாடும்போது முதலில் ஒருசில ஆட்டங்களில் மனிதர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நம்பும் மனிதர்கள், அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும்போது, அவர்களுக்குத் தோல்வியே பரிசாகக் கிடைக்கும். அதற்கேற்ற வகையில்தான் ஆன்லைன் சூதாட்டங்களின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government listened to the request made by Ramadoss

இதை உணராமல், ஆன்லைன் ரம்மி ஆட்டத்துக்கு அடிமையானவர்கள், மீண்டும் மீண்டும் விளையாடிப் பணத்தை இழப்பார்கள். இறுதியில் அவர்களில் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள். இவற்றை ஆதாரங்களுடன் விளக்கி, ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய இன்றைய நிலையில் இதுதான் ஒரே வழியாகும். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் கூட எந்தப் பயனும் கிடைக்காது. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து, புதிய சட்டம் இயற்றுவதுதான் சரியான தீர்வு ஆகும். எனவே, சட்ட வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்பச் சட்ட வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரை அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.

Tamil Nadu Government listened to the request made by Ramadoss

இந்நிலையில், ராமதாஸ் கோரிக்கை வைத்த சில மணிநேரங்களிலேயே புதிய சட்டம் இயற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு அரசின் கருத்துக்களை சார்பில் ஆணித்தரமாக தலைமை எடுத்து வழக்கறிஞர் வாதிட்டு, உரிய வைத்த போதிலும், இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

Tamil Nadu Government listened to the request made by Ramadoss

பொது நலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்வித தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என  முதலமைச்சர் நேற்றையதினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே, முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios