மத்திய அரசின் கருத்துகளை கடுமையாக எதிர்க்கிறோம் எனவும் தமிழக விவசாயிகள் உணர்வுப்பூர்வமாக போராடி வருவது மத்திய அரசுக்கு தெரியவில்லையா எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கால அவகாசம் முடியும் வரையுமே மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுவதாக கூறுவதில் உண்மையில்லை எனவும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் முக்கிய இடங்களில் எல்லாம் திட்டம் (Scheme) என்றே கூறியுள்ளதாகவும் இதற்கு விளக்கம் காணவே மத்திய அரசு முயற்சி எடுத்து வருதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் கருத்துகளை கடுமையாக எதிர்க்கிறோம் எனவும் எதற்காகவும் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் சாடினார். 

மேலும் கர்நாடக மக்களின் உணர்கள் புரியும் மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் உணர்வுப்பூர்வமாக போராடி வருவது  தெரியவில்லையா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.