தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் தான் பாதிப்பு கடுமையாக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 2526 பேரில் 1082 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 

கடந்த ஒரு வாரமாக சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என்பதால் கட்டாயத்தின் பேரில் மே 3க்கு பிறகு 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது மத்திய அரசு. 

ஊரடங்கை செயல்படுத்துவதற்கும், கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கும் ஏதுவாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலத்திலும், பாதிப்பு குறைவாகவோ அல்லது பாதிப்பிலிருந்து மீண்ட மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. 

அந்தவகையில், இந்த மண்டல வாரியாக பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் எந்தெந்த துறை பணிகளுக்கு ஊரடங்கு தளர்வு வழங்கலாம் என்பது குறித்து தமிழக அமைச்சரவை கூடி விவாதித்தது. 

அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த நிலையில், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி எந்தவிதமான தளர்வுமின்றி ஏற்கனவே பின்பற்றப்படுவதை போலவே ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக இல்லாத பகுதிகளுக்கு சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.