சீனாவில் உருவான கொரோனா வைரஸ் சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் இதுவரை 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக, கொரோனா வைரஸ் இன்னும் சமூகத்தில் பரவவில்லை. சமூகப்பரவலை தொடக்க, நாடு முழுவதும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. 

உணவு பொருட்கள், மருந்துகள் ஆகிய அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலி மற்றும் கூலி தொழிலாளர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், சாலையோர வீயாபாரிகள் என பல தரப்பினரும் தங்களது வருமானத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கொரோனா எதிரொலியாக அனைத்தும் முடங்கியுள்ளதால், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த தொகையை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க, டோக்கன் முறையில் இந்த தொகை வழங்கப்படும் எனவும் விலையில்லா அரிசி, சர்க்கரை ஆகியவையும் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நிவாரண பணிகளுக்காக ரூ.3250 கோடியை ஒதுக்கியுள்ள முதல்வர் பழனிசாமி, ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று உணவு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.அதற்காக தேவையான இடங்களில் உணவு சமையற்கூடங்கள் அமைக்கப்படும். இதற்கான உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.