இந்தியாவில் கொரோனாவால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா தான். அதன்பின்னர் தான் மகாராஷ்டிரா, கர்நாடகா என கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா பரவியது.

முதல் கொரோனா கேஸ் உறுதியான நாளிலிருந்து அதன்பின்னர், கொரோனா பாதிப்பு கேரளாவில் மளமளவென உயர்ந்தது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து கேரளாவின் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டது. அதன் விளைவாக, மார்ச் மாத இறுதி வரை தாறுமாறாக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை, ஏப்ரல் தொடக்கம் முதல் கட்டுக்குள் வந்தது. 

முதல் மாநிலமாக கொரோனா பாதிப்பில் இரட்டை சதமடித்த கேரளாவில் இப்போது வரை பாதிப்பு எண்ணிக்கை 395ஆக உள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவிய கட்டத்தில், கணக்கையே தொடங்காமல் இருந்த சில மாநிலங்கள் இப்போது கடுமையான பாதிப்புகளை சந்தித்துவருகின்றன. ஆனால் கேரள அரசின் தீவிரமான நடவடிக்கைகளாலும், மருத்துவர்களின் அயராத உழைப்பாலும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. 

இதுவரை கேரளாவில் 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 255 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா கட்டுக்குள் வந்ததை கண்டு கேரள அரசாங்கத்தையும் மருத்துவர்களையும் வியந்து பாராட்டும் தமிழ்நாட்டு மக்கள், நம் மண்ணின் மருத்துவர்களின் உழைப்பையும் நமது அரசின் செயல்பாடுகளையும் பாராட்ட தவறியிருந்தால், இனியாவது பாராட்டுங்கள்.

ஏனெனில் மார்ச் இறுதிவரை ஓரளவிற்கு பாதிப்பு கட்டத்துக்குள் இருந்த தமிழ்நாடில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும் சராசரியாக 70 பேருக்கு கொரோனா உறுதியாகி கொண்டே இருந்தது. அதனால் தமிழ்நாட்டில் அதிவேகமாக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. ஒரு கட்டத்தில் டெல்லி, ராஜஸ்தானையெல்லாம் பின்னுக்குத்தள்ளி மகாராஷ்டிராவின் எண்ணிக்கையை நெருங்கியது.

தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளாலும் நமது மருத்துவர்களின் அயராத உழைப்பாலும் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில தினங்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதற்கான சமிக்ஞை.

கொரோனா பாதிப்பு குறைந்துவரும் அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்து வீடு  திரும்பிவருகின்றனர். நேற்று ஒரே நாளில் 62 பேரும் இன்று ஒரேநாளில் 103 பேரும் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 283ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்தியதன் விளைவாக ஒட்டுமொத்த தேசத்தாலும் வியந்து பார்க்கப்படும், கேரளாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255. தமிழ்நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283. இவ்வளவுக்கும் கொரோனா பாதிப்பு முதலில் உறுதியானது கேரளாவில்தான். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டிற்கு வெகுநாட்களுக்கு முன்பிலிருந்தே அங்கு கொரோனா தொற்றுள்ளவர்களூக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கும். அப்படியிருந்தும் தமிழ்நாட்டை விடகுறைவான நபர்களே குணமடைந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் அதிகமானோர் குணமடைந்திருப்பது, நமது மருத்துவர்களின் துரிதமான, நேர்த்தியான, அக்கறையான சிகிச்சை முறையை உணர்த்துகிறது.