ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். நாணயத்தின் ஒருபக்கம் சேதமடைந்தால் அந்த நாணயமே செல்லாததாக ஆகிவிடும் என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக அதிமுக அரசுடன் ஒத்துழைக்க திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டன.அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளை பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அதிமுக அரசு தான் செய்ய வேண்டுமே தவிர நேரடியாக எதிர்க்கட்சிகள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்குவதற்கான உரிமையை எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை கவனிக்கிற போது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்கிற கருத்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழக அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு எந்த அமைச்சரும் ஊடகங்களில் பார்க்க முடியவில்லை. தொடக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் பேச ஆரம்பித்தார். தற்போது அவரையும் காண முடியவில்லை.

அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பு கொண்டதாகும். அத்தகைய கூட்டுப்பொறுப்பை முற்றிலும் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக எதேச்சாதிகாரமாக, எல்லாமே நான் தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா தொற்று நோயினால் தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களும் அச்சம் பீதியில் உறைந்துபோயிருக்கிற தருணத்தில் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை எவரும் அனுமதிக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஆனால், திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள 11 கட்சிகள் அறிவாலயத்தில் உள்ள விசாலமான கலைஞர் அரங்கத்தில் 10 அடி இடைவெளியில் அமர்ந்து ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார ஆட்சி தடை விதித்தது.

ஆனால், தடையை மீறி கூட்டம் நடத்தியிருக்க முடியும். அப்படி நடத்துவதன் மூலம் சோதனையான இந்த நேரத்தில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசின் தடையை ஏற்றுக்கொண்டு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சேலத்தில் முதல்வர் ஆற்றியிருக்கிற உரை எதேச்சாதிகாரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அந்த உரையில், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதற்காக கூட்ட வேண்டும்? இவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் என்ன மருத்துவர்களா? தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக அதிமுக ஆட்சி மீது நாள்தோறும் குற்றம் குறை கூறி வருகிறார்கள்" என்று ஆத்திரம் பொங்க கொட்டித்தீர்த்திருக்கிறார்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக போட்டியிட்டு திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி காட்சிகள் பெற்ற வாக்குகளை விட 5 லட்சம் வாக்குகளை அதாவது 1.1% வாக்குகளை தான் அதிகமாக பெற்று ஆட்சி அமைக்கப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இதன்மூலம் மக்கள் பிரச்சினையில் அதிமுக ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதில் எள்ளின் முனையளவு கூட குறையாமல் எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிற அக்கறையை எவராலும் மறுத்துவிட முடியாது.

ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். நாணயத்தின் ஒருபக்கம் சேதமடைந்தால் அந்த நாணயமே செல்லாததாக ஆகிவிடும் . இத்தகைய ஜனநாயக தாத்பரியத்தை அரசியல் விபத்தினால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவிலேயே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதில் 10 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல, விரைவு சோதனைக் கருவிகள் பெறுவதில் மத்திய அரசு கொள்முதல் செய்த 5 லட்சம் கருவிகளில் தமிழகத்திற்கு 12 ஆயிரம் சோதனை கருவிகள் தான் வழங்கப்படுகின்றன என முதல்வர் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் கூறுகிறார்.

நிதி ஒதுக்கீடு செய்வதிலும், சோதனைக் கருவிகள் வழங்குவதிலும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்து பாரபட்சமாக நடத்துவதை தட்டிக்கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் துணிவில்லை? மடியில் கனமிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசால் பிரதமர் மோடியை எதிர்த்து எப்படி உரிமைக்குரல் எழுப்ப முடியும்? ஆனால் பிரதமர் மோடியின் பாரபட்ச போக்கை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டுவது தமிழக எதிர்கட்சிகளின் கடமையாகும்.

எனவே அதிமுக அமைச்சர்களை அடக்கி ஒடுக்கி எதேச்சாதிகாரமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்வதில் அவர் வெற்றி பெறலாம். ஆனால் தமிழக எதிர்கட்சிகளை தமது சர்வாதிகார அணுகுமுறையின் மூலம் அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற எடப்பாடி பழனிசாமியின் கனவு பகல் கனவாக தான் முடியும். அத்தகைய மக்கள் விரோத அணுகுமுறையை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மக்கள் ஆதரவோடு முறியடித்து காட்டப்படும்" என தெரிவித்துள்ளார்.