தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்ட பிறகு அவர் முதன் முறையாக சென்னைக்கு வந்தார். கடந்த இரு தினங்களாக சென்னையில் இருந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தன. அப்போது திமுக காங்கிரஸ் தரப்பில் மூத்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

 
 சந்திப்புக்குப் பிறகு தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பல்வேறு விவகாரங்களில் திமுகவும் காங்கிரசும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றிவருகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி கடுமையாக பாடுபடும்.
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவோம். அதேபோல கூட்டணியையும் பலப்படுத்துவோம். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்து மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவோம். மற்ற விஷயங்கள் குறித்து எதுவும் ஸ்டாலினுடன் பேசவில்லை. அதைப் பற்றி தேர்தல் நெருங்கும் வேளையில் பேசலாம்.” என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.