தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் தற்போது இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ள திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்கப் போவதாக சில வாரங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு நிலவியது. கட்சியின் புதிய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. திருநாவுக்கரசர் அமெரிக்க சென்றுவந்த பிறகு மாற்றங்கள் நிகழும் என்றும் கூறப்பட்டன.

ஆனால், தற்போது நாடாளுமன்றத் தேர்தல்வரை அவரது பதவிக்கு சிக்கல் இருக்காது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியலில்  நீண்ட அனுபவமிக்க திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிப்பது சரியாக இருக்காது என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகின்றன. 

இதற்கு இன்னொரு உதாரணத்தையும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியைப் பறிக்க வழக்கம்போல கோரிக்கைகள் வலுத்தன. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல்வரை கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகே இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். 

அதேபோல இந்த முறையும் தேர்தலுக்கு முன்பாக தலைவரை மாற்றும் முடிவை கட்சி மேலிடம் எடுக்காது என்று கட்சியினர் அடித்துசொல்கிறார்கள். கூட்டணி கணக்கில் வல்லவர் என்பதாலும் அதிரடியாக கருத்துச் சொல்பவர் கிடையாது என்பதாலும் திருநாவுக்கரசரே தலைவராகத்  தொடர்வார் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.