முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்தவர்களை வரலாறு நிச்சயம் பாராட்டும் என்று சீமான் பேசியுள்ளதை கண்டித்து, ''சீமான் ஒரு தேச துரோகி'' என்றும் ''சிமான் ஒரு அரசியல் கோமாளி'' என்றும் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகரி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் முழு விவரம் பின்வருமாறு:-

  

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையை நியாயப்படுத்தியும் அதை செய்தவர்களை வரலாறு நிச்சயம் போற்றிப் பாராட்டும் என்று பயங்கரவாத வன்முறை செயலை பகிரங்கமாக ஆதரித்துப் பேசியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சின் மூலம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் தேசத்துரோக குற்றத்தை சீமான் செய்திருக்கிறார். இதன் மூலம் சமூக அமைதிக்கு கேடு விளைவித்து இருக்கிறார்.தமிழர் விரோதி சீமான் கீழ்தரமாக அநாகரிக ஆணவ பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். 

  

இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால இன்னல்களைத் துடைக்க ஒப்பந்தம் கண்டவர் ராஜீவ்காந்தி, இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம்  இணைக்கப்பட்டு தமிழர் தாயக பகுதி வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்றுத் தந்தவர் ராஜீவ் காந்தி.  இதற்காக இலங்கை ராணுவ வீரனால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவர் அவர் என்பதை எவரும் மறந்துவிட முடியாது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய  அமைதிகாக்கும் படையை அனுப்பியவர் ராஜீவ் காந்தி. இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய இந்திய அமைதிகாக்கும் படையை சேர்ந்த 2000 இந்திய  வீரர்களை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று  குவித்தவர்கள் நன்றிகெட்ட விடுதலைப்புலிகள். இவர்களின் துரோகத்தை மறைக்கும் சீமானை விட தேசத்துரோகி எவரும் இருக்க முடியாது.

பயங்கரவாதி பிரபாகரனின் சதித் திட்டத்தால் பலியாக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உயிர் தியாகத்தை பகிரங்கமாக கொச்சைப்படுத்தும் கொடூரன் சீமானை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அன்று விடுதலைப் புலிகளால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோதும் தொடர்ந்து 1991 தேர்தல் நடைபெற்ற போதும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் வெளிப்படுத்தி அனுதாபத்தையும், காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவையும் அரசியல் கோமாளி சீமான் அறிய வாய்ப்பு இல்லை. பாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நியாயப்படுத்தி வன்முறையை தூண்டி பொது  அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தகைய தேச விரோத செயலில் ஈடுபட்ட சீமானை தலைவராகக் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இதற்கான  புகார்களை காவல்துறை இடமும் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்