கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா 500ஐ கடந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் 411 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் 364 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். 

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுவருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. எனவே டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லீம்களால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகவும், தமிழ்நாட்டையும் இந்தியாவையும் இக்கட்டான நிலைக்கு அந்த மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லீம்கள் தள்ளிவிட்டதாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.அது தவறு என்பதை அப்படியானவர்கள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

இந்நிலையில், கொரோனா தொற்று சாதி, மதம் பார்த்து பரவாது. அது அனைவரையும் தொற்றக்கூடிய கொடியது. எனவே கொரோனா தொற்று பரவலுக்கு தயவு செய்து யாரும் மதச்சாயம் பூச வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை திறந்திருக்க அனுமதியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், சமூக விலகலை உறுதி செய்வதற்காகவும் ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மதியம் 2.30 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், அதில் ஒன்றரை மணி நேரத்தை குறைத்து மதியம் ஒரு மணி வரை மட்டுமே மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.