தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. நேற்றைய நிலவரப்படி மொத்தம் 738 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தேசிய அளவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால், ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தான ஆலோசனை நடந்துவருகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு அரசு சார்பிலும் பிரதமர் மோடியிடம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. 

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல துறை செயலாளர்கள், மற்ற சில ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அடுத்தகட்டத்திற்கு பரவாமல் தடுப்பது தான் அரசின் நோக்கம். எனவே அந்த குழுக்களுடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் முகக்கவசங்கள், மருந்துகள், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அனைத்தும் போதுமான அளவு உள்ளன. 4 லட்சம் துரித கொரோனா டெஸ்ட் கிட்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 ஆயிரம் கிட்கள் இன்றிரவு வந்துவிடும். அவற்றை வைத்து கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்தார்.