சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர இருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அதிமுக திட்டங்களை நிறுத்திய திமுக அரசு
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கண்டன உரையை நிகழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு தான் வீட்டு வரியை உயர்த்த சொல்லி உள்ளது என்கிறார், ஆனால் அப்படி எங்கும் மத்திய அரசு குறிப்பிடவில்லை. மத்திய அரசின் மீது வீன் பழியை போட்டு ஏமாற்ற பார்க்கின்றனர். இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு வெளியிட்ட கட்சி திமுக தான், அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் 487வது அறிவிப்பில் சொத்து வரி உயர்த்தப்படாது என்று சொல்லிவிட்டு தற்போது ஏன் உயர்த்தபட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டம்மான தாலிக்கு தங்கம் என்கிற அற்புதமான திட்டம் பல லட்சம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதனால் பலன் அடைந்தார்கள் - திருமண உதவி திட்டம் எண்ணற்ற பலன்களை மக்களுக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.ஆனால் இந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

திமுக கொண்டு வந்த திட்டம் என்ன ?
இரண்டு ஆண்டுகளாக கொரோனோவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நேரத்தில் இந்த அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை அல்லாமல், அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலை பட்டு கொண்டு உள்ளதாக தெரிவித்தார். வேலை இல்லாமல், வாழ்வாதராமே இல்லாத நிலையில் மக்கள் உள்ள நிலையில் இந்த வரியை உயர்த்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கட்டுமான பொருட்களில் ஊழல் நடைபெறுவதாக தெரிவித்தவர், ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 30 ரூபாய் திமுகவிற்கு செல்வதாக குற்றமசாட்டினார். அப்படி என்றால் எவ்வளவு கோடி செல்லும் என மக்கள் என்னி பார்க்க வேண்டும் என கூறினார். விளம்பரத்தில் தான் திமுக அரசு இயங்கி வருகிறது என்றும், இல்லை என்றால் எப்போதே காணாமால் போய் இருப்பார்கள் என தெரிவித்தார். .10 மாதத்தில் திமுக என்ன திட்டத்தை கொண்டு வந்தது என கேள்வி எழுப்பியவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்திற்கு எல்லாம் ரிப்பன் கட் பன்னி வருவதாக தெரிவித்தார். நாம் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகிறார் என்றும் விமர்சித்தார்.

உலக பளு தூக்கும் போட்டியில் ஸ்டாலின் ?
கடந்த 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து தான் முதலீடு செய்ய தான் ஸ்டாலின் துபாயில் சென்றதாகவும் தெரிவித்தார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டபேரவை தேர்தல் வந்தாலும் வரலாம் என பிரதமரே கூறி உள்ளார் - எனவே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள் என திமுகவினருக்கு கூறினார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் தெரிவித்தார். காவல் துறை செயல் இழந்து விட்டது என்றும் பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையெனவும் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் டீ, குடிப்பதையும், நடைபயிற்சி செய்வதையும், பளு தூக்குவதையும் தான் அதிக அளவில் பத்திரிகை செய்திகளில் போட்டுக்கொண்டே இருக்கிறார்.எனவே அடுத்த உலக பளு தூக்கும் போட்டிக்கு முதலமைச்சர் ஸ்டாலினை அனுப்பிவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி ஆர்பாட்டத்தின் போது ஸ்டாலினை கலாய்தார்.
