முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்தில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்நாட்டு எம்.பி.க்களை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், பிற தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இரண்டு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, முதல் கட்டமாக 29 அன்று இங்கிலாந்து சென்றார். முதல் கட்டமாக நேற்று முன் தினம் சுகாதாரத் துறை தொடர்பாக மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்நிலையில் லண்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற எம்.பி.க்களை நேற்று சந்தித்து பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பு இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றிருக்கிறது. இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தில் அரசு செயல்படுத்திவரும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார். இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் திகழ்வதையும் எடப்பாடி பழனிச்சாமி பெருமையாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்பட்டுவரும் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளித்து வருவதையும் முதல்வர் பெருமையாக எடுத்துக் கூறியிருக்கிறார்.


தமிழகத்தில் சுகாதாரத் துறை கடந்துவந்த பாதையையும் அதன் வளர்ச்சியையும் இங்கிலாந்து எம்.பி.க்களிடம் விரிவாக முதல்வர் பேசியிருக்கிறார். இச்சந்திப்பின்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்துள்ளனர். இதனையடுத்து லண்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளையும் முதலீட்டாளர்களையும் தொழில் நிறுவனர்களையும் முதல்வர் சந்தித்துப் பேசியிருக்கிறார். நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலதிபர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார்.