சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 14-ம் தேதி தலைமைச்செயலகத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது நிலவக்கூடிய சூழல் குறித்தும், புதிய திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும். ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டங்களுக்கு விவரிவாக்கம் தொடர்பாகவும் ஒப்புதல் வழங்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் சூழ்நிலை இல்லை என தமிழக முதல்வர் மத்திய மனித மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், செமஸ் தேர்வுகளை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ஆராய உயர்கல்வித்துறை செயலாளர் அபுர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இறுதி ஆண்டு தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. மேலும், சென்னையை போன்று தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வரருகிறது. இதனை கட்டுப்படுத்த அடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.