தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இறை நம்பிக்கைக்கு எதிராக தமிழ்க் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.  இந்துப் பெண்களை மிகத் தவறாக வர்ணிக்கிறார்கள். இதை எதிர்த்தும் மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக வெற்றிவேல் யாத்திரை ஒரு மாத காலம் நடைபெறும்.
தமிழகத்தில் பாஜக அபாரமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 60 லட்சம் பேர் தங்களது வீடுகளில் வேல் பூஜை நடத்தினார்கள். பாஜக தமிழகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள், பொறாமையால் இந்த யாத்திரையைத் தடுத்து நிறுத்திட புகார் அளிக்கிறார்கள். திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியதே.. அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்ய யாரும் கேட்கவில்லையே.. இதுபோன்ற கோரிக்கைகளை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது என்ற நம்பிக்கை உள்ளது. 2021 சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வரும். அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்” என்று கே.டி.ராகவன் தெரிவித்தார்.