ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் விமர்சித்துள்ளார்.
சிஏஏ-வை கொண்டுவந்த  மத்திய அரசை ஆதரித்து ரஜினி பேசிய நிலையில், டெல்லி வன்முறைக்கு பாஜகவை கண்டித்தார்.  நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி கலவரத்துக்கு அமித்ஷாவின் உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம் என்று ரஜினி கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், “டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். உளவுத்துறை வேலையை சரியாகச் செய்யவில்லை. உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வியென்றுதான் அர்த்தம்.” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

 
 நடிகர் ரஜினியின் இந்தக் கருத்துக்கு கமல்ஹாசன், திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த பாஜக, தற்போது ரஜிக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


அதில், “ உளவுத் துறை தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்தின் அறியாமை. ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது” என்றும் ரஜினியை விமர்சித்துள்ளார்.