பெரியாரை இழிவுப்படுத்திய விவகாரத்தில் பாஜகவை விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்விட்டர் பாணியில் அவருக்கு தமிழக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
பெரியாரின்  நினைவு நாளையொட்டி தமிழக பாஜகவின் ஐ.டி. விங், பெரியார் பற்றி பதிவிட்டிருந்த ட்விட்டர் சர்ச்சையானது. பெரியாரை இழிவுப்படுத்தியதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராகக் கொந்தளித்தனர். இதனையடுத்து அந்தப் பதிவை பாஜக நீக்கியது.


இதையடுத்து அதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவுசெய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டர் பதிவு ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், பயம் பற்றி அந்த பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும்” என்று தமிழக பாஜக குறிப்பிட்டுள்ளது.
மேலும் விநாயகர் சதுர்த்திக்கு மு.க.ஸ்டாலின் முக நூலில் வாழ்த்து சொன்ன பதிவையும் தமிழக பாஜக இணைத்துள்ளது.