தமிழக பாஜக தலைவராக ரஜினி நியமிக்கப்பட உள்ளதாக வெளியான புரளியின் பின்னணியில் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சி ஒன்றின் கைங்கர்யம் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்க உள்ள நிலையில் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது திடீரென ரஜினி பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. 

இதனை சில முன்னணி ஊடகங்கள் கூட வெளியிட்டன. மேலும் பாஜக தலைவராக ரஜினி நியமிக்கப்பட்டு அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன. இது ரஜினி தரப்பை மிகவும் அப்செட்டாக்கியது. இதனால் ரஜினி தரப்பில் இருந்து வரும் தைப் பொங்கலில் கட்சிப் பெயர், மார்ச்சில் மாநாடு என்று தகவல்கள் பரப்பப்பட்டன. 

பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலை ரஜினியே விரும்பவில்லை என்றும் அதனால் அவரது தரப்பில் இருந்தே புதுக்கட்சி தொடர்பான தகவல்கள் கசியவிடப்பட்டன. மேலும் ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், தமிழருவி மணியன் போன்றோர் ரஜினி தனிக்கட்சி தான் ஆரம்பிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் ரஜினி பாஜக தலைவராகப்போவதாக உருவாக்கப்பட்ட புரளியின் பின்னணியில் பெரிய கட்சி ஒன்று இருப்பதாக அவர் கூறி வருகிறார். ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியின் தலைவருக்கு பாதிப்பு ஏற்படும் என்று தொடக்கம் முதலே பயந்து வருவதாகவும் அதனால் கிடைக்கும் போதெல்லாம் ரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய அந்த கட்சியின் ஐடி விங்க் ஏதாவது செய்து வருவதாகவும் தமிழருவு தெரிவித்துள்ளார்.

 

அவர் அந்த கட்சியின் பெயரை கூறவில்லை. இது குறித்து விசாரித்த போது பெரும்பாலும் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அந்த கட்சியின் தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் தான் ரஜினி பாஜக தலைவர் வதந்தியை ஷேர் செய்துள்ளது தெரியவந்துள்ளது.