மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை கோட்ட பொறுப்பாளரும் பாஜக மாநில பொதுச்செயலாளருமான சீனிவாசன் திருச்சிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். “கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு கிடையாது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. அதனால், பாஜகவில் அமைப்பு ரீதியான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம்.


முன்பு மாற்றுக்கட்சியினர் பாஜகவில் தனித்தனியாக வந்து இணைந்தனர். தற்போது அந்தக் காலம் மாறிவிட்டது. கூட்டம் கூட்டமாக வந்து பாஜகவில் இணைகிறார்கள். பாஜகவில் இணைவதில் இளைஞர்கள் அதிக அளவு உள்ளார்கள். திமுகவிலிருந்து வெளியேறுபவர் அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து விலகுவோர் திமுகவுக்கும் செல்வார்கள். இப்போது இரு தரப்பிலிருந்தும் பாஜகவுக்கு வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் தலைமையில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் எங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது எங்கள் பக்கம் வருவார்கள்.
சிறையிலிருந்து சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழக அரசியலில் எந்தத் தாக்கமும் இருக்காது. கடந்த 4 ஆண்டுகளில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவரால் அதிமுகவை கைப்பற்ற முடியாது. தமிழகத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது. இதை ஆய்வு செய்துதான் நாங்கள் தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் 90 சதவீத வாக்குச்சாவடிகளில் பாஜக வலுவாக இருக்கிறது.  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்த கட்சிகள் எல்லாம் நட்பாகவே உள்ளன. என்றபோதும் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி பற்றி தெரியவரும்” என்று சீனிவாசன் தெரிவித்தார்.