குழந்தைக்கு மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல், பொய்யான வாக்குறுதி அளித்து திமுக வெற்றி பெற்றது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார். 

 அதற்குப் பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக நிறைவேற்ற முடியாத பெய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக வாக்குகளை பெற்றுள்ளது என விமர்சித்தார். 

முதல்வரின் கருத்துக்குப் பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதை வைத்து பொய்யான வாக்குறுதி என்கிறீர்கள்? விரைவில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அப்போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றார். 

அதற்குப் பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, இதைத்தான் 2 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே வருகிறீர்கள். மத்தியிலும் ஆட்சி, மாநிலத்திலும் ஆட்சி என்று சொன்னீர்கள். ஆனால், தேர்தலில் மக்கள் உங்களை தொங்கலில்விட்டு விட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால் எங்களாலும் நிச்சயம் வெல்ல முடியும் என்றார்.