அதிமுகவை வைத்து பாஜக ஏற்கனவே காலூன்ற முயன்று நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை கூட்டு சேர்த்ததால் அதிமுகவின் கால்கள் உடைந்தது, அதிமுகவிற்கே கால் இல்லாத நிலையில் பாஜகவை காலூன்ற வைப்பது இயலாது.என கிண்டலடித்திருக்கிறார் கேஎஸ்.அழகிரி.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, “தமிழகத்தில் வாள் யாத்திரையும், வேல் யாத்திரையும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. கடவுள் முக்கியமல்ல கடவுள் யார் கையில் இருக்கிறார் என்பதுதான் முக்கியம். முருகனின் வேல் எங்களுடைய கையில் இருக்கும் போது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும், பாஜகவின் கையில் இருக்கும் போது ரத்தம் சிந்த கூடிய ஆயுதமாக மாறும். தமிழகம் மதச்சார்பற்ற ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட அற்புதமான மண், இந்த மண்ணில் வேற்றுமை ஏற்படுத்த முடியாது. ஸ்டாலின் தன்னுடைய மண்ணில் இருக்கிறார், தன்னுடைய மக்களுக்காக வாழ்கிறார், 50 ஆண்டுகள் அவரது கட்சி அரசியலில் உள்ளது. அவரை கோ பேக் என்று சொல்ல முடியாது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதியரசர் கலையரசன் தெரிவித்திருந்தார், மாநில அரசு 7.5% ஆக மாற்றியது. புதுச்சேரி அரசு 10% அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு அதனை பின்பற்றி அதிமுக அரசு செய்துள்ளது. அதன் பின்னர் ஆளுநர் அழுத்தம் தாங்காமல் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் அதிமுகவிற்கும், பாஜகவிற்கு சம்பந்தமில்லை. எதிர்க்கட்சிகளின் வெற்றி. ரஜினி 20 வருடமாக கட்சி ஆரம்பிப்பது கூறி வருகிறார், அவர் எப்போது கட்சி ஆரம்பிக்கிறார் என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவரிடமே கேட்போம்.

அதிமுகவை வைத்து பாஜக ஏற்கனவே காலூன்ற முயன்று நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை கூட்டு சேர்த்ததால் அதிமுகவின் கால்கள் உடைந்தது, அதிமுகவிற்கே கால் இல்லாத நிலையில் பாஜகவை காலூன்ற வைப்பது இயலாது. பாஜகவில் இணையும் நட்சத்திரங்கள் ஒளியிழந்த நட்சத்திரங்கள், ஒளி இழந்த நட்சத்திரங்கள் ஜொலிக்க முடியாது” என்று தெரிவித்தார்.