கூட்டணி தர்மம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையால் கே.எஸ்.அழகிரியின் பதவி பறிக்கப்படும் சூழல் உள்ளதால் அவர் கதறிக் கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருக்கும் போது திமுகவின் செயல்பாடுகளை விமர்சிப்பது அவரது வழக்கம். திமுகவுடன் கூட்டணியாக இருந்தாலும் கூட ஒரு சில விஷயங்களில் அக்கட்சித் தலைவர்களை வெளிப்படையாக இளங்கோவன் விமர்சிப்பார். அதிலும் ஆ.ராசா, டி.ஆர்.பாலு போன்றோரை பெயர் குறிப்பிட்டே இளங்கோவன் கிழித்து தொங்கவிடுவார். சமயத்தில் கலைஞரின் முடிவுகளை கூட இளங்கோவன் விமர்சனத்திற்கு ஆளாக்குவார்.

ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதையும் இளங்கோவன் பேசமாட்டார். இதனால் இளங்கோவனை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது. ஆனால் கே.எஸ்.அழகிரி கூட்டணி தர்மம் என்கிற வார்த்தையை பயன்படுத்தி வெளியிட்டஅறிக்கை திமுக மேலிடத்தை கொதிக்க வைத்துள்ளது. அதிலும் அந்த அறிக்கையை படித்ததும் ஸ்டாலினின் முகம் சிவந்துவிட்டதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் காங்கிரசுக்கு 10 எம்பி சீட்டுகளை கொடுத்து அழகு பார்த்தோம் நாம் அது கூட்டணி தர்மம் இல்லையா?

ராகுலை அவர்களின் கட்சியினரே பிரதமர் வேட்பாளராக ஏற்காத நிலையில் நான் அவரை முன்மொழிந்தேனே அது கூட்டணி தர்மம் இல்லையா? என்று கொந்தளித்துள்ளார் ஸ்டாலின். அதோடு மட்டும் அல்லாமல் அழகிரி இருக்கும் வரை இனி காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிற தீர்க்கமான முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பேச்சின் போது நிகழ்ந்த சம்பவங்களை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைமைக்கு திமுக முறைப்படி புகார் அனுப்பியது.

இந்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மறுநாள் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, கூட்டணி குறித்து ஏற்கனவே பேசிய கருத்துகள் பற்றி பேச மறுத்துவிட்டார். ஆனாலும் ஸ்டாலின் கோபம் அடங்கவில்லை என்கிறார்கள். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு ஸ்டாலினை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் ஸ்டாலினின் கோபத்தை புரிந்து கொண்டு அவருக்கு எப்போதும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டு பார்த்தார்.

ஆனால் அந்த அறிக்கை எல்லாம் ஸ்டாலினை சமாதானப்படுத்தவில்லை. இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இதில் பங்கேற்கவே திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு டெல்லி சென்று இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் திமுக தலைமையிடம் இருந்து வந்த அறிவுறுத்தலால் பாலு கூட்டத்திற்கு செல்லவில்லை. அழகிரியின் செயலால் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து உடனடியாக டெல்லி வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது பதவி பறிபோவது உறுதி என்கிற  முடிவுக்கு வந்துள்ள அழகிரி அவரசமாக டெல்லி புறப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்காத குறையாக அறிக்கை வெளியிட்டும் திமுக இந்த விவகாரத்தில் கடுமை காட்டியதால் அழகிரி பரிதவிக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.