talks around tn and it officials taken video in jayalaithas veda illam

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் இப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைந்த பின்னர், அவர் வாழ்ந்த அந்த இல்லத்தினை நினைவிடமாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பை அரசு முன்னர் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் முன்னிலையில் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். வேதா இல்ல மதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த ஆய்வுப் பணியில் ஆட்சியர், வட்டாட்சியர், பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்த ஆய்வுப் பணிகள் நடப்பதற்கு முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறிய போது, சாட்சியத்திற்காக மட்டுமே வருமான வரித் துறை அதிகாரிகள் வரவழைக்கப் பட்டனர். வேதா இல்லத்தில் ஒரு மணிநேரம் ஆய்வு நடைபெறும் எனக் கூறியிருந்தார். 

பின்னர் இந்த ஆய்வுப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் ஆட்சியர் அன்புச் செல்வன். அப்போது அவர், வேதா இல்லத்தில் ஆய்வுப் பணிகள் சுமுகமாக நடைபெற்றன. நில அளவைத் துறை, பொதுப்பணித்துறை என துறை ரீதியாக ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. நில எடுப்புச் சட்டம் 2013ன் கீழ் வேதா இல்லம் கையகப் படுத்தப் பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் இரண்டு அறைகள் வருமான வரித் துறையால் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. வருமான வரித்துறை சீல் வைத்த அறையில் எந்த ஆய்வும் நடைபெறவில்லை என்று கூறினார் மாவட்ட ஆட்சியர். 

ஆனால், முன்னதாக செய்தியாளர்கள் வட்டத்தில் ஒரு தகவல் பரவியது. வருமான வரித்துறை அதிகாரிகள் துணையுடன் தமிழக அரசு அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு, ஜெயலலிதா இருந்த அறையில் வீடியோ எடுக்கப் பட்டதாக ஒரு தகவல் கூறப்பட்டது. ஆனால், ஆட்சியர் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்துவிட்டார்.