கொள்ளை லாபம்‌ ஈட்ட வேண்டும்‌ என்ற எண்ணத்தோடு பஞ்சினை பதுக்கி வைத்து,பற்றாக்குறை ஏற்படுத்தி, விலை ஏற்றத்திற்கு யாராவது காரணமாக இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாட்டில்‌ தற்போது அனைத்துப்‌ பொருட்களின்‌ விலையும்‌ விஷம்‌ போல்‌
ஏறியிருக்கின்ற சூழ்நிலையில்‌, நூல்‌ விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதன்‌ காரணமாக ஜவுளித்‌ தொழில்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம்‌ நிதியாண்டு துவக்கத்தில்‌ 38 ஆயிரம்‌ ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பஞ்சு தற்போது ஒரு இலட்சம்‌ ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.

மேலும் படிக்க: பருத்தி , நூல் விலை உயர்வு.. வேலை நிறுத்த போராட்டம்.. பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

கடந்த ஓராண்டில்‌ மட்டும்‌ 162 விழுக்காடு விலை உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில்‌, ஜவுளித்‌ தொழில்‌ சந்தித்து வருகின்ற பிரச்சனைகளுக்கு காரணங்களாக ஆயத்த ஆடைகளுக்கான பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட இருக்கிறது என்பதும்‌, இறக்குமதி செய்யப்படும்‌ பஞ்சுக்கான 11 விழுக்காடு வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்‌ என்பதும்‌ சொல்லப்பட்டன. 

இந்த சூழ்நிலையில்‌ நூல்‌ விலை உயர்வால்‌ ஜவுளித்‌ தொழில்‌ பெரும்‌ சரிவை சந்தித்து வருவதாகவும்‌, உற்பத்தி செலவு அதிகரிப்பால்‌ உற்பத்தியாளர்கள்‌ தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருவதாகவும்‌, தொடர்ந்து உற்பத்தி செய்ய இயலாத நிலையில்‌, நூல்‌ விலை உயர்வைக்‌ குறைக்க வலியுறுத்தி திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, ஈரோடு உள்ளிட்ட இடங்களில்‌ இன்று மற்றும்‌ நாளை வேலை நிறுத்தம்‌ செய்ய இருப்பதாகவும்‌ தகவல்கள்‌ வந்துள்ளன.

மேலும் படிக்க: சாவு பயம் காட்டும் பப்ஸ்.. சவர்மாவுக்கு அடுத்து பப்ஸ்.? தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் !

மத்திய அரசு வரியை குறைத்தும்‌, நூலின்‌ விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. வாணிகம்‌ என்ற பெயரில்‌ கொள்ளை லாபம்‌ ஈட்ட வேண்டும்‌ என்ற எண்ணத்தோடு பஞ்சினை பதுக்கி வைத்து, பற்றாக்குறை ஏற்படுத்தி, விலை ஏற்றத்திற்கு யாராவது காரணமாக இருக்கிறார்களா என்பதையும்‌, விலை உயர்விற்கு என்ன காரணம்‌ என்பதையும்‌ கண்டறிய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, தேவைப்பட்டால்‌ மத்திய அரசிடம்‌ கலந்து ஆலோசித்து, நூல்‌ விலையைக்‌ குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்ளுவதாக அவர் தெரிவித்துள்ளார்.