நாளை திமுக நடத்தவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு இலட்சிய திமுக ஆதரவு அளிக்கும் என்றும், பாஜக நம்மை பிரித்தாள நினைப்பதாகவும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அமைக்காமல், மேலும் 3 மாதம் கால அவகாசம்
கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. அதற்கு உச்சநீதிமன்றம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்திவரும் மத்திய அரசைக் கண்டித்தும், வாரியத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், வரும் 5-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது.

திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்துக்கு, இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர், எங்களது தாய் கழகமான திமுக சார்பில் உள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு, எங்கள் கட்சியின் சார்பில் முழு ஆதரவு தருகிறோம். மேலும் எங்களது இலட்சிய திமுக சார்பில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தஞ்சையில் விவசாயிகளுடன் இணைந்து ஒரு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

பாஜக, நம்மை பிரித்தாள நினைக்கிறது. நடக்கும் எடப்பாடி அரசு, மோடியின் பினாமி அரசு. நாம் தனித்தனியாக போராடாமல் ஒன்று சேர்ந்து போராடினால் மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று டி.ஆர். கூறினார்.