மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை ஏமாற்று வேலை என லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் விமர்சித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தரிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டி.ராஜேந்தர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு தந்திரம்.. அது ஒரு மூடுமந்திரம். மின்னணு வாக்குப்பதிவு முறை மாற்றப்பட வேண்டும். வாக்கு சீட்டில் வாக்குகளை குத்த முடியாததால்தான், முதுகில் குத்துகிறார்கள் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். நான் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டபோது எனது சின்னமான பட்டத்திற்கு போடப்பட்ட வாக்குகள் எல்லாம் மற்ற சின்னங்களுக்கு விழுந்தன. அதனால் நான் தோற்றேன். அதன்பிறகு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றார்.

நாட்டு அரசியல் செய்யுங்கள்; அதைவிடுத்து ஓட்டு அரசியல் செய்யாதீர்கள் என்று பாஜகவை விமர்சித்தார். இந்த விவகாரத்தில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் டி.ராஜேந்தர் முன்வைத்தார்.