கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பழனி மாணிக்கத்துடன் மல்லுக்கட்டி தஞ்சாவூரில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, இந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்திருக்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. அமாவாசை தினமான நேற்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுக்கள் அளித்தனர். இதில் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததுதான் ஹைலைட்.
தென் சென்னையில் 1991-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றவர் டி.ஆர்.பாலு. கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி மறுசீரமைக்குப் பிறகு தென் சென்னை தொகுதியின் பல பகுதிகள் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்றதால், அந்தத் தொகுதியில் போட்டியிடார். அந்தத் தேர்தலில் சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது. இதனால், 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் போட்டியிட முடிவு செய்து டி.ஆர்.பாலு காய் நகர்த்தினார்.
டி.ஆர்.பாலுவின் தஞ்சாவூர் பாசத்தைக் கண்டு அந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பழனி மாணிக்கம் கோபம் கொண்டார். இருவருக்கும் வார்த்தைப் போர் மூண்டது. இருவரையும் அழைத்து கருணாநிதி சமாதானம் செய்து வைத்தது எல்லாம் அப்போது நடந்தது. ஆனால்,  தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தஞ்சாவூரில் போட்டியிட டி.ஆர்.பாலு சீட்டு பெற்றார். ஆனால், கடந்தத் தேர்தலில் தஞ்சாவூரில் அவர் மண்ணைக் கவ்வினார்

.
இந்நிலையில் இந்த முறையும் தஞ்சாவூரில் டி.ஆர்.பாலு போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். ஆனால், தற்போது மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட டி.ஆர்.பாலு முடிவு செய்துவிட்டார். தஞ்சாவூரில் ‘உள்குத்து’ செய்து தோற்கடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், மீண்டும் ஸ்ரீபெரும்புதூருக்கே வந்துவிட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  இதன்மூலம் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறார் டி.ஆர்.பாலு. இவரது மனமாற்றத்தால் தஞ்சாவூரில் பழனி மாணிக்கம் ரூட்டும் கிளியர் ஆகியிருக்கிறது.