தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த வெளிநாட்டு இஸ்லாமியர்களை பாஜக ஆளும் மாநிலங்களில்கூட இல்லாத அளவுக்கு அதிமுக அரசு துன்புறுத்தி வருவது சட்ட விரோதமானது என்று திமுக நாடாளுமன்ற குழு  தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்துக்கு 9 நாடுகளிலிருந்து வந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் 15 வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அதிமுக அரசு கைது செய்து, அவர்களை எல்லாம் மத்திய அரசு வகுத்துள்ள “தடுப்பு மற்றும் சிறப்பு முகாம்கள்” விதிகளுக்கு மாறான இடங்களில், சுகாதார வசதி, உணவு வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நெருக்கடி மிகுந்த சிறார் இல்லங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.


ஏற்கனவே பலருக்குப் பிணை வழங்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கடந்த ஜூன் 12 அன்று மேலும் 4 பெண்கள் உட்பட 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கு பிணை வழங்கியது. அந்த உத்தரவில், “அவர்களைப் புழல் சிறையில் உள்ள சிறப்பு முகாமில் வைப்பது சரியில்ல. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரபிக் கல்லூரியிலோ அல்லது வேறு நல்ல இடத்திலோ அவர்களைத் தங்க வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்கள் கொரோனா பரப்பியதற்கான ஆதாரம் இல்லை. விசா விதிமுறை மீறலுக்காக போதுமான அளவு தண்டனையை அனுபவித்து விட்டார்கள். ஆகவே இதனை ஒப்புக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்களின் வழக்கை முடித்து தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைப்பதற்குத் தமிழக அரசு உதவிட வேண்டும்” என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பிணைக்கான நிபந்தனைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றிய பிறகும், மேற்கண்ட 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களையும் கொரோனா பரவும் புழல் சிறையில் அடைத்து வைத்திருப்பதும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு இவர்களை அதிமுக அரசு துன்புறுத்தி வருவதும் சட்ட விரோதமானது. மத்திய அரசே இதுகுறித்து வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிரானது.
ஆகவே உயர்நீதிமன்றத்தால் பிணை அளிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களை உடனடியாக விடுவித்து, அவர்களைச் சுகாதார வசதிகள் கொண்ட சிறுபான்மை கல்வி நிறுவனத்தின் விடுதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அவர்கள் மீதான வழக்குகளை முடித்து வைப்பது குறித்தும், அவர்களைச் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய - மாநில அரசுகள் தாமதமின்றிப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிக்கையில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.