Asianet News Tamil

இதெல்லாம் சண்முகம் பேசல... அவருக்கு உத்தரவு போடும் எடப்பாடியார் வாய்ஸ்... டி.ஆர்.பாலு திரும்பவும் அறிக்கை!

பத்திரிகைகளில் திரித்துப் பேசுவது வருத்தமளிக்கிறது. யார் உண்மையைப் பேசுகிறார்கள்? - யார் திரித்துப் பேசுகிறார்கள்? என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்” என தற்போது கோட்டை கொத்தளத்தில் விபத்தாக வந்து அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் போல் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஐ.ஏ.எஸ், விளக்கம் என்ற நிலையை விடுத்து, “மறுப்பு” என்ற அளவைப் பின்பற்றி அறிக்கை விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.
 

T.R.Baalu reply statement on chief secretary statement
Author
Chennai, First Published May 15, 2020, 7:11 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் நாங்கள் அத்துமீறி நடந்துகொண்டது போல ஒரு “கற்பனை”ச் சித்திரத்தைப் புனைந்திட முயற்சி செய்வது - அவரது சொந்தக் குரலாகத் தெரியவில்லை; அவருக்கு ஆணையிடும் முதலமைச்சரின் “அரசியல் வாய்ஸ்” போல் தெரிகிறது என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தலைமை செயலாளர் சண்முகத்தைச் சந்தித்த திமுக எம்.பி.க்களை, அவர் அவமானப்படுத்தினார் என்று திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் புகார் கூறியிருந்தனர். இந்தப் புகாருக்கு தலைமை செயலாளர் சண்முகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தலைமைச் செயலாளரின் இந்த அறிக்கைக்கு டி.ஆர். பாலு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்திரிகைகளில் திரித்துப் பேசுவது வருத்தமளிக்கிறது. யார் உண்மையைப் பேசுகிறார்கள்? - யார் திரித்துப் பேசுகிறார்கள்? என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்” என தற்போது கோட்டை கொத்தளத்தில் விபத்தாக வந்து அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் போல் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஐ.ஏ.எஸ், விளக்கம் என்ற நிலையை விடுத்து, “மறுப்பு” என்ற அளவைப் பின்பற்றி அறிக்கை விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.


“மறுப்பு” என்று சொல்வதிலிருந்தே, மூத்த அதிகாரியான அவர், பிரச்னையை முடித்துக் கொள்ள முற்படாமல் அதை மேலும் வளர்த்து வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட எண்ணுகிறார். ஏதோ முன்னாள் மத்திய அமைச்சர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுமாகிய நாங்கள் கொரோனா நோய்த் தொற்று பேரிடர் குறித்தே ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை என்பது போன்ற தோற்றத்தை தன் அறிக்கை மூலம் உருவாக்கிட முயற்சி செய்து - இறுதியில் தோல்வி கண்டிருக்கிறார். தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் நாங்கள் அத்துமீறி நடந்துகொண்டது போல ஒரு “கற்பனை”ச் சித்திரத்தைப் புனைந்திட முயற்சி செய்வது - அவரது சொந்தக் குரலாகத் தெரியவில்லை; அவருக்கு ஆணையிடும் முதலமைச்சரின் “அரசியல் வாய்ஸ்” போல் தெரிகிறது!
“ஒன்றிணைவோம் வா” செயல்திட்டம், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீரிய முயற்சி! பிரதான எதிர்கட்சித் தலைவராக, எங்கள் கழகத் தலைவர் மக்களுக்கு உதவிட ஆற்றிய பொறுப்புள்ள - ஆக்கபூர்வமான கடமை! நாங்கள் தலைமைச் செயலாளரைச் சந்தித்தபோது, இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாதது போல் நடந்து கொண்டார். அப்போதுகூட அவரது எதார்த்தமான நடத்தை அல்ல; எஜமானர்களின் சொல் கேட்டு அமைத்துக் கொண்ட நடவடிக்கை என்று நினைத்து நாங்கள் அமைதி காத்து - பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகளாக தலைமைச் செயலாளர் அறையில் நடந்து கொண்டோம். அதற்கு அவரது அறையில் நடைபெற்ற நிகழ்வுகளே சாட்சி.


திராவிட முன்னேற்றக் கழகத்தையோ, எங்கள் கழகத் தலைவர் அவர்களையோ அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் இல்லை எனவும், “எதிர்கட்சித் தலைவர் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன்” என்றும் மறுப்பு என்ற தலைப்பில் “காலதாமதமாக” அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தலைமைச் செயலாளரை நாங்கள் சந்திக்க நேரம் கேட்டது, எங்கள் தனிப்பட்ட சொந்தக் காரியத்திற்காகவோ, அனுகூலத்திற்காகவோ, சலுகைக்காகவோ அல்ல; கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனுக்களை - அதுவும், “ஒன்றிணைவோம் வா” என்ற முக்கிய நிகழ்ச்சி மூலம், நாங்கள் ஒருங்கிணைந்து நிறைவேற்றியது போக, மீதியுள்ள ஒரு லட்சம் மனுக்களை அரசிடம் ஒப்படைத்து - அதன்மீது நடவடிக்கை எடுக்க வைத்து, மக்களுக்கு ஆவன செய்வதற்காகவே!
மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடன் சில நிமிடங்கள் கூட ஒதுக்கி - மக்களின் கோரிக்கை மனுக்களை, அவருடைய கடமை என்ற அடிப்படையில், பரிவுடன் கலந்து பேசிடத் தலைமைச் செயலாளருக்கு நிச்சயம் நேரம் இருந்தது; அதனால்தான் அவர் எங்களைச் சந்திக்க அனுமதி கொடுத்தார். எங்களைச் சந்திக்க அனுமதி கொடுத்ததற்கும், நாங்கள் அங்கு செல்வதற்கும் இடையில் நடைபெற்ற ‘அரசியல்’தான் தெரியவில்லை. ஏன் தலைமைச் செயலாளர் எங்களிடம் அப்படி வித்தியாசமாக நடந்து கொண்டார்? யாருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மக்களவை உறுப்பினர்களான எங்களுடனான சந்திப்பில் “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்று நடந்தார் என்பதுதான் எங்கள் நியாயமான உணர்வு.
அதற்கு தனது மறுப்பு அறிக்கையில் தலைமைச் செயலாளர் உரிய பதிலை அளிக்கவில்லை; அப்படிப் பதில் சொல்ல ஏதுமில்லை. அரசு பதவியில் பல்வேறு துறை சார்ந்த அனுபவம் கொண்டவரும் - குறிப்பாக, கருணாநிதி தலைமையிலும் -  திமுக தலைவர் துணை முதல்வராக இருந்தபோதும் பணியாற்றியவருமான கே.சண்முகம் மீது எங்களுக்கு மதிப்பு உண்டு. ஆனால், மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் நேற்றைய தினம் நடந்து கொண்டது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது; ஆச்சரியம் அளித்திடக் கூடியது; எந்த வகையிலும் விளக்கி - சமாதானம் செய்திடவோ, நியாயப்படுத்திடவோ முடியாதது!
ஆனால் நாங்கள் திரும்பி வந்ததும், திமுக சார்பில் கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளதற்காக - அந்த மனுக்களை அளித்த மக்களின் சார்பில் தலைமைச் செயலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் மக்கள் பிரதிநிதிகள் மிகுந்த கடமையுணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவார்கள் என்பதை உணர வேண்டும். அதிலும் குறிப்பாகத் திமுக மக்களவை உறுப்பினர்களாக இருக்கும் நாங்கள் எல்லாம் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற தாரக மந்திரத்தை, பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில், தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்து வருபவர்கள் என்பதைத் தலைமைச் செயலாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


சண்முகம் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, அரசியல்ரீதியான விருப்பு - வெறுப்புக்கு எந்த நேரத்திலும் ஆட்பட்டுவிடாமல், எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளுடன் மட்டுமல்லாமல், அனைவரிடத்தும், போற்றத்தக்க முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகாது.” என்று அறிக்கையில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios