நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொடங்கிவைத்தார். பின்னர் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டுக்குச் சென்றார். பின்னர் டி.ஆர். பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். “நீட் தேர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.


 நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக அரசுக்கு திடீரென ஞானோதயம் பிறந்துள்ளது. இதைக் கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடும் சூழல்தான் நிலவுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அதிமுக அரசு ஆதரிக்கிறது. எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகள், பொதுமக்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். உதயநிதி ஸ்டாலின் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். எனவே சேப்பாக்கம் தொகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்.


தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பது ஆட்சியே அல்ல. இங்கே சில காட்சிகள்தான் நடைபெற்றுகொண்டிருக்கின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் அந்தக் காட்சிகளும் இருக்காது. அதிமுக எனும் கட்சியே இருக்காது” என டி.ஆர். பாலு தெரிவித்தார்.