sv shekher sorry to women journalists
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான பதிவிட்டதற்கு விளக்கம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார் எஸ்.வி.சேகர்.
பெண் பத்திரிகையாளர் குறித்தும் தமிழ் மீடியாக்களில் பணிபுரியும் பெரும்பாலான செய்தியாளர்கள் என குறிப்பிட்டு மிகவும் இழிவாக எஸ்.வி.சேகர் பதிவிட்டிருந்தார்.
பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் ஆளுநர் கை வைத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அந்த பெண் பத்திரிகையாளரும் இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு எதிர்வினையாக பதிவிடுவதாக கருதி, பெண் பத்திரிகையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் விதமாக மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் மோசமாக எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார். எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது முகநூல் பதிவு தொடர்பாக விளக்கம் அளித்தும் பெண் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கோரி எஸ்.வி.சேகர் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் விடுத்துள்ள அறிக்கையில், எனது நண்பர் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்த கட்டுரையை படிக்காமல், அதை என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன். அதை படித்த எனது நண்பர் ஒருவர், அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக சொன்னார். உடனடியாக அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது. அதில் உள்ள கருத்துகளை நான் ஆதரிக்கவில்லை. அதிலும் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை. பெண்களை மதிக்கக்கூடிய குடும்பத்திலிருந்து வருபவன் நான். தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். தரம் தாழ்ந்த அரசியலிலோ தனிமனித விமர்சனங்களிலோ எனக்கு விருப்பம் கிடையாது. நான் அதை செய்யவும் மாட்டேன்.
இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில், நீக்கப்பட்ட இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை சமூக வலைதளங்களில் பகிர்பவர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என எஸ்.வி.சேகர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
