இலைகளும், கிளைகளும், பூக்களும் என்னதான் வெளிப்படையாய் ஆட்டம் போட்டாலும் அவற்றின் உயிரானது நிலத்துக்கு அடியில் மறைந்தே கிடக்கும் வேர்கள்தான். வேர்களின் முடிவின்படிதான் வளர்ச்சியும், மலர்ச்சியும் அமையும். அதுபோலதான் அரசியலில் சில ஆளுமைகள் வெளியே தெரிவதில்லை! Invisible Component-ஆக இருந்து ஒட்டுமொத்த அரசியலின் போக்கையும்  மாற்றுவார்கள். 

அரசியலில் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் அதிகார மையங்களாக இருக்கின்ற, இருந்த பலரில் மிக முக்கியமானவர் ’சோ’ என்றழைக்கப்பட்ட சோ.ராமசாமி. சினிமாவில் ஜெயித்துவிட்டு அரசியல் பாதையை பிடித்த பலரை பார்த்திருக்கிறோம், ஆனால் சோ-வோ சினிமாவிலேயே அரசியலை செய்தவர். சினிமாவை விட்டு விலகிய பிறகு ‘அரசியல் கன்சல்டன்ட்’ ஆக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் ஜனரஞ்சக அரசியல் வழிகாட்டியாக அவர் இருந்ததில்லை. பி.ஜே.பி., அ.தி.மு.க. என்று வெகு சில இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் மட்டுமே சோ-வின் அன்புக்கும், அரசியல் வழிகாட்டுதல்களுக்கும் பாத்திரமாக இருந்தார்கள்.  

ஜெயலலிதா சோவுக்கு மிக நெருக்கமான நண்பர்தான். ஆனாலும் பி.ஜே.பி.யின் ‘பீஷ்மரான சோ’ தனது அரசியல் பாதையில் தலையிட பெரிதாய் அனுமதித்ததில்லை. சரி, ‘சோ’ பற்றி இப்போது என்ன கட்டுரை? என்கிறீர்களா...விஷயம் இருக்கிறது. பொலிடிகல் கன்சல்டன்ட் ஆனா சோ தனக்கான விசிட்டிங் கார்டாக, தனது நண்பனாக, தனது இனிய எதிரியாக, தன்னை காக்கும் பிரம்மாஸ்திரமாக, தன் எதிரிகளை வெளுத்தெடுக்கும் ஆயுதமாக என எல்லாமுமாக பயன்படுத்தியது ‘துக்ளக்’ எனும் தன் பத்திரிக்கையைதான். சோவைப் போலவே இந்த புத்தகமும் ஜனரஞ்சக முகம் கொண்டதில்லை. 'அடர்த்தியான கருத்துக்களை கொண்ட இந்த புத்தகம், சோவின் மறைவுக்குப் பின்னும் அரசியல் வெளியில் அசால்ட் நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில்! எல்லா வகையிலும் சோவின் ‘வழி’யை சேர்ந்தவரும், பி.ஜே.பி.யின் மிகப்பெரிய ரசிகருமான நடிகர், இயக்குநர் எஸ்.வி.சேகர், சோ பெயரில் புத்தகம் துவங்குகிறார். ‘சோ’ என பெரிதாயு போட்டுவிட்டு அதன் அடியில் ‘ழி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே சோழி!, CHOzi! என்று அந்தப் புத்தகத்தின் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. 

எஸ்.வி.சேகர் எப்போதுமே அக்குறும்பான டயலாக்கிற்கு சொந்தக்காரர். அந்த வகையில் அந்த புத்தகத்தின் பற்றிய விளம்பர ஸ்லைடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆசிரியர்: எஸ்.வி. சேகர், எனப்போடப்பட்டு அதன் அருகில் ‘குடும்ப அரசியல் வார இதழ்’ என்று அந்த புத்தகத்தின் எண்ணமும், நோக்கமும் தெளிவாக்கப்பட்டுள்ளது! துக்ளக் புத்தகத்தை போலவே லே -அவுட், கார்டூன் என எல்லாமே இந்தப் புத்தகத்திலும் இருக்கும் போல் தெரிகிறது. விளம்பர ஸ்லைடும் அதைத்தான் சொல்கிறது. 

இந்த ஸ்லைடில், சோ “குடும்ப அரசியல் பத்திரிக்கையா...ரெண்டு கட்சிகளைப் பத்தி சொல்ல ஒரு வார இதழா?” என்று கேட்க அதற்கு எஸ்.வி.சேகரோ பவ்யமாக...”அப்படியில்லே குருவே...குடும்பத்தோட படிக்கக் கூடிய அரசியல் பத்திரிக்கை இது.” என்று பதில் தருவது போல் கார்டூன் வடிவமைத்துள்ளனர். அதன் அருகிலேயே இரண்டு கழுதைகள் “ஹையா...பக்கத்துக்கு பக்கம் வித்தியாசமான டேஸ்ட்ல நமக்கு சாப்பாடு கிடைக்கப்போவுது...” என்று குதுகலிப்பது போலும் கார்டூன் வெளியாகி உள்ளது. ஹேஸ்யமான வார்த்தைகளில் யதார்த்த அரசியலை போட்டுப் பொளப்பவர் சோ, அவரை குரு என குறிப்பிட்டிருக்கும் எஸ்.வி.சேகரும் அதே டைப் பேர்வழிதான். சோ பெயரில் வெளி வரும் ‘சோழி’ நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அரசியல் அரங்கில் எந்தளவுக்கு தெறிக்கவிடப்போகிறதோ! கவனிப்போம்....