தமிழக அரசியல்வாதிகள் சில கமெண்டுகளையும், சர்ச்சைகளையும்  தண்ணீர் போல் வைத்திருப்பார்கள். எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நெருப்பை மூட்டி, சுடவைத்து அந்தப் பிரச்னையை கொதிக்க வைத்துவிடுவார்கள். அப்படித்தான் ரஜினிகாந்த் மற்றும் உதயநிதிக்கு இடையிலான உரசல் விவகாரத்தை ஆறவே விடாமல், அடிக்கடி  கொதிக்க வைத்துக் கொண்டே இருக்கிறனர். வேறொன்றுமில்லை, குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக நடந்த வன்முறைகளைப் பற்றிக் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 19-ம் தேதியன்று ‘எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண, வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.’ என்று ட்விட் செய்திருந்தார்.


 
ரஜினியின் இந்த நிலைப்பாட்டை ‘பா.ஜ.க.வின் அடிவருடிதான் ரஜினி என்பதை இந்த ட்விட் பட்டவர்த்தனமாக நிரூபித்துவிட்டது.’ என்று தி.மு.க. உள்ளிட்ட பா.ஜ.க. மற்றும் ரஜினிக்கு எதிரான கட்சிகள் சாடினர். இது ஒருவித  இறுக்கத்தை உருவாக்கியது. இந்த நிலையில், தி.மு.க. நடத்த இருந்த  கண்டன பேரணிக்கு அழைப்பு விடுத்து கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் ‘உரிமைக்கான போராட்டத்தை கண்டு, வன்முறை என அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு தி.மு.க. நடத்தும் பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம்.’ என்று தடாலடியாய் தெரிவித்திருந்தார். இதைப்பற்றி கருத்து தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள் ‘உதயநிதி, ரஜினியைத்தான் இப்படி வயதான, பெரியவர் என மறைமுகமாக சாடியிருக்கிறார்.’ என்று கருத்து தெரிவித்தனர். 

ஆனால் ’உதயநிதி சுற்றி வளைத்து ட்விட் பண்ணவில்லை. ரஜினியைத்தான் நேரடியாக அட்டாக் செய்திருக்கிறார்!’ என்று தி.மு.க.வின் எம்.பி.யான கலாநிதி கருத்து தெரிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஏக ரவுசாகிவிட்டனர். அவர்கள் பதிலுக்கு உதயநிதியை சமூக வலைதளங்களில் போட்டு வறுத்த துவங்கினர். உடனே தி.மு.க. தரப்பும் ரஜினியை வெச்சு செய்ய துவங்கியது. இந்த நிலையில், ரஜினிக்கு ஆதரவாக நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் மிக கடுமையாக உதயநிதியை விமர்சனம் செய்தார். 

தன் கருத்தை பற்றி பேசியிருக்கும் எஸ்.வி.சேகர் “மொத்தமே 3 படங்கள்தான் சுமாராக போயிருக்கிறது உதயநிதிக்கு, அவரெல்லாம் 160 படங்களுக்கு மேல் நடித்த ரஜினி எனும் மெகா நடிகர் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை உலக அளவில் முந்நூறு கோடிக்கு உயர்த்திய நடிகரை ‘கிழவன்’ எனச் சொல்வது தவறு. எல்லோரும்தான் கிழவன் ஆவோம். எனக்கு கூட எழுபது வயதாகப்போகிறது.  

உதயநிதியே, உங்கப்பாவுக்கு 70 வயசாகாதா? உங்க தாத்தாவுக்கு 90 வயசாகலையா! அதென்ன கிழவன் என பேசுவது? உதயநிதி பேசியது மிகப் பெரிய தவறு. உன்னை விட மூத்தவர்களை  இன்னைக்கு நீ ’கிழவன்! பெருசு!’ன்னு சொன்னால், நாளைக்கு உன் மகனுக்கு நீ கிழவனாவாய். ஆமா, உன்னை அப்படித்தான் அழைப்பான் உன் மகன். எச்சரிக்கை.” என்று பின்னி எடுத்திருக்கிறார்.