மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கட்சி அலுவலக வளாகத்தில் மதிமுக கட்சி கொடியையும் வைகோ ஏற்றி வைத்தார். பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். “பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவுக்காக ஆண்டுதோறும் மாநாடு நடத்தினோம். கொரோனா காரணமாக இந்த முறை காணொலி காட்சி மூலம் கருத்தரங்கு நடத்துகிறோம்.
 நீட் தேர்வால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் மரணமடைந்த அதிர்ச்சியில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. விளம்பரமே இல்லாமல் ஏராளமான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா ஒரு அறச்சிந்தனையாளர். சூர்யாவின் கருத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதை தலைமை நீதிபதி ஏற்றுக்கொள்வார் என்று  நம்புகிறேன்.


தமிழகத்தில் கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகிய இரு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.” என்று வைகோ தெரிவித்தார்.