தமிழக மக்கள் மத்தியில் ரஜினிக்கு ஆதரவு இல்லை என்பது போல் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் பின்னணியில் பா.ஜ.க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அரசியல் கருத்துகளை மட்டுமே கூறி வந்த ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ந் தேதி அறிவித்தார். அதன் பிறகு தனது ரசிகர் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கையில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார். மேலும் தமிழக பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது ரஜினி தனது கருத்துகளை கூறி வருகிறார். ரஜினி கூறும் கருத்துகள் பெரும்பாலும் மத்திய பா.ஜ.க அரசுக்கு சாதகமான அம்சமாகவே இருக்கும் வகையில் இதுநாள் வரை பார்த்துக் கொள்ளப்பட்டது. 

ஆனால் சமீப காலமாக ரஜினியின் நடவடிக்கையில் பா.ஜ.கவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ரஜினி அரசியல் களம் காண முடிவெடுத்தது முழுக்க முழுக்க ஆடிட்டர் குருமூர்த்தியின் யோசனையின் பேரில் தான். ஆடிட்டர் குருமூர்த்தி தீவிரமான பா.ஜ.க ஆதரவாளர். ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் ஆடிட்டர் குருமூர்த்தியின் நிலைப்பாடு. ஆனால் ரஜினியோ பா.ஜ.கவோடு கூட்டணி வேண்டாம் என்பதில் தற்போது உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யோசனையிலும் ரஜினி இல்லை என்று சொல்லப்படுகிறது. இது தான் பா.ஜ.கவின் அதிருப்திக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை காட்டிலும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியுடன் இணைய வேண்டும் என்று தான் பா.ஜ.க மேலிடம் விரும்புகிறது. ஆனாலும் அ.தி.மு.கவும் சரி ரஜினியும் சரி பா.ஜ.கவுடன் கூட்டணி என்றால் தயங்குகிறார்கள். 

இதனால் ரஜினியை வழிக்கு கொண்டுவர தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக்கணிப்பை பா.ஜ.க மேலிடம் பயன்படுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
பா.ஜ.கவிற்கு மிகப்பெரிய ஆதரவாளரான அந்த தொலைக்காட்சி இதுநாள் வரை ரஜினியை மிகவும் முன்னிலைப்படுத்தியே செய்தி வெளியிட்டு வந்தது. அந்த தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் செய்தித்தாளில் கடந்த வாரம் ரஜினியின் பேட்டி முதல் பக்கத்தில் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டிருந்தது. 

ஆனால் ஒரே வாரத்தில் ரஜினிக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்கிற ரீதியில் கருத்துக் கணிப்பை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதற்கு காரணம் ரஜினிய அச்சுறுத்த வேண்டும் மேலும் அவரை குழப்பம் அடையச் செய்ய வேண்டும் என்கிற பா.ஜ.கவின் வியூகம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தங்களை ஆதரிக்கவில்லை என்றாலும் தாங்களும் உதவப்போவதில்லை என்று இதன் மூலம் ரஜினிக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது பா.ஜ.க