மிகப்பெரிய இயற்கை சீற்றத்தில் இருந்து மீண்ட கேரளாவை அடுத்த சில நாட்களில் தாக்கியது ஒரு செயற்கை பூகம்பம். அது ‘சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சென்று வழிபடலாம்’ எனும் நீதிமன்ற தீர்ப்புதான். இயற்கையாக இல்லாமல் செயற்கையாக சில மனிதர்களின் வழக்குகள் மூலம் உருவான தீர்ப்பல்லவா இது. 

இந்த தீர்ப்பை ஏற்க இயலாது என்று சபரிமலை ஆலயத்தின் தேவசம் போர்டு, மன்னர் பரம்பரையினர், மற்றும் உலகளாவிய இந்துக்கள் ஆவேசம் காட்டி வருகின்றனர். ஆனால் கேரள அரசோ தன் கையில் இருக்கும் போலீஸின் மூலம் இந்த உத்தரவை அமல்படுத்த துடிக்கிறது. 

இந்நிலையில் பெண் உரிமை பேசும் அமைப்பை சேர்ந்தவர்களும், சில நாத்திக அமைப்பினரும் ஐயப்ப பக்தர்களாக வந்து (அதாவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்ட வயதை சேராதவர்கள்.) தரிசனம் செய்ய முயல்வதும், அதை பக்தர்கள் தடுப்பதும், அரசு தரப்பே முழு பாதுகாப்புடன் சில பெண்களை தரிசனம் செய்ய வைப்பதுமாக பெரும் பிரளயங்கள் அங்கே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கேரளா சென்ற பிரதமர் மோடி, திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பின் ஆளும் மார்க்சிஸ்ட் ஆட்சியையும், கம்யூனிஸ்டுகளையும் வெளுத்து வாங்கிவிட்டார் இப்படி...”சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகளின் நடவடிக்கை, வரலாற்றில், மோசமான அரசு அல்லது கட்சிகளின் செயல்பாட்டை காட்டிலும் மோசமானது. 

இடதுசாரிகள் இந்திய கலாசாரம், பண்பாடு, ஆன்மிகத்தை மதிக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த அளவுக்கு வெறுப்பு வைத்திருப்பார்கள் என்று தெரியாது. அவர்களை வரலாறு மன்னிக்காது. இந்த விவகாரத்தில் காங்கிரஸும் சிறந்தது அல்ல. பார்லிமெண்டில் ஒன்றை கூறுவார்கள், பத்தனம்திட்டாவில் ஒன்றை கூறுவார்கள்.” என்றார். 

மோடியின் விமர்சனத்தை மார்க்சிஸ்ட் ஆட்சியும், அக்கட்சியினரும் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 

இந்நிலையில் மோடி விசிட்டுக்குப் பின் சுறுசுறுப்பாக, ’சபரிமலை விவகாரத்தில் எந்த கட்சி ஓ.கே!’ என்ற கேள்வியுடன்  நடத்தப்பட்ட ஒரு ஆன்லைன் சர்வேயில் காங்கிரஸ் கட்சி நல்ல பெயரை வாங்கிக் கட்டியிருக்கிறதாம். ”கேரள கம்யூனிஸ்ட் அரசை சபரிமலை விவகாரத்தில் திட்டும் மோடியின் அரசுதானே நாட்டை ஆளுகிறது. இப்படியொரு வழக்கு விவகாரம் எழாமலே கூட பார்த்திருக்கலாமே. 

ஆக இரண்டு கட்சிகளும் வெறும் வாக்கு வங்கிக்காக இந்த நாடகத்தை ஆடுகிறார்கள். இருவருமே இந்த நாடகத்தில் வில்லன்கள்தான்.  ஆனால் காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை.” எனும் ரீதியில் பதில்களும், எக்கச்சைக்க ஆதரவு வாக்குகளும் வந்து விழுந்துள்ளதாம். 
ப்பார்றா பப்புவுக்கு வந்த யோகத்தை!