Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் விவகாரத்தில் மின்னல் வேகத்தில் செயல்படும் தமிழக அரசு.. சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நாளை விசாரணைக்கு வருகிறது. 
 

supreme court will hearing tamil nadu government appeal about tasmac tomorrow
Author
Delhi, First Published May 11, 2020, 7:03 PM IST

கொரோனா ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஒயின் ஷாப்புகளை திறக்கலாம் என்று அனுமதியளித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 

40 நாட்களுக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள், அரசு மற்றும் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மிகவும் நெருக்கமாக நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக்கூறி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. 

அதனால் 9ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அந்த மேல்முறையீட்டு மனுவில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால்,  முதல் நாள் அதிக கூட்டம் இருந்ததே தவிர, இரண்டாம் நாளில் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்றும் அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்திருக்க வேண்டியது. ஆனால் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், முக்கியமான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் பிழை இருப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றம் அந்த மனுவை இன்று விசாரிக்க மறுத்துவிட்டது. 

இந்நிலையில், உடனடியாக அந்த மேல்முறையீட்டு மனுவில் இருந்த பிழையை திருத்தி, தேவையான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசு சார்பில் இணைக்கப்பட்டுவிட்டன. எனவே டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. 

டாஸ்மாக் கடை விவகாரத்தில், தமிழக அரசு அதிவிரைவாக செயல்படுகிறது. எப்படியாவது டாஸ்மாக் கடைகளை திறந்தே தீர வேண்டும் என்கிற உறுதியில் இருக்கும் தமிழக அரசு, அதேவேளையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திறக்கும் ஆர்வத்தில் உள்ளதைத்தான் இந்த செயல் உணர்த்துகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios