Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரத்தில் இதுவரை என்னதான் செஞ்சுருக்கீங்க? அவகாசம் கேட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி

supreme court order to karnataka government
supreme court order to karnataka government
Author
First Published May 3, 2018, 11:48 AM IST


தமிழகத்திற்கு மே மாதம் வழங்க வேண்டிய 4 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி இறுதி வழக்கின் இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கான நீரை 192 டி.எம்.சியிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்ட கெடு மார்ச் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. 

இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரத்தில், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்குகளை கடந்த ஏப்ரல் 9ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மே 3ம் தேதிக்குள் காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

அந்தவகையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால், காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் வாங்க முடியவில்லை. எனவே மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, கர்நாடகாவில் தேர்தல் குறித்து நீதிமன்றத்துக்கு கவலையில்லை. இதுவரை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

மேலும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு மே மாதம் தரவேண்டிய 4 டி.எம்.சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios