சபாநாயகர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை சுதந்திரமான தனி அதிகாரம் உடைய ஒரு அமைப்பிடம் ஒப்படைப்பது குறித்து  நாடாளுமன்றம் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2017-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஷ்யாம் குமார் என்பவர் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் முடிந்ததும் பாஜகவில் இணைந்து அமைச்சராகிவிட்டார்.  அவருடைய பதவியை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்கும்படி சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்தது. ஆனால், அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. ஆனால், சட்டத்தில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்தைச் சுட்டிக் காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அந்த விசாரணையின் மீது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். “கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஷ்யாம் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இனியும் சபாநாயகர் காலம் தாழ்த்தக் கூடாது. குறிப்பிட்ட கால வரையறுக்குள் சபாநாயகர் இந்த முடிவை எடுக்க வேண்டும். 
காங்கிரஸ் மனு மீது சபாநாயகர் நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடிவை அறிவிக்க வேண்டும். சபாநாயகரின் முடிவில் திருப்தி இல்லையென்றால் காங்கிரஸ் நீதிமன்றத்தை அணுகலாம். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதை தடுக்கவே கட்சி தாவல் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், சபாநாயகர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவரிடம் இருப்பது சரியாக இருக்குமா என்பதை நாடாளுமன்றம் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை நேர்மையாக இருக்க வேண்டும்.
எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை சபாநாயகரிடம் வழங்குவதற்கு பதிலாக சுதந்திரமான தனி அதிகாரம் உடைய ஓர் அமைப்பிடம் அதிகாரத்தை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.