திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மூன்று வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா வழக்கு தொடர்ந்தார். 

மேலும் இருவர் இடைத்தேர்தலை நிறுத்த வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேவேளை இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. 

தேர்தலை நிறுத்தக்கோரிய மனு மீதான இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மூன்று வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது.