தமிழ்நாட்டில் 40 நாட்களுக்கு பிறகு கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அனுமதியின் பேரில்தான் டாஸ்மாக் கடைகள், கடந்த 7ம் தேதி சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிமனித இடைவெளி உறுதி செய்யப்படும் என அரசு உத்தரவாதம் அளித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என்று தெரிவித்தது. ஆனால், மது வாங்க வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துவர வேண்டும், ஒரு தனிநபர் வாங்குவதற்கான மதுபான அளவு நிர்ணயம், ஆன்லைனில் பணம் செலுத்தியவருக்கு கூடுதல் மதுபானம் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது. 

இதையடுத்து கடந்த 7ம் தேதி சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காய்ந்த மாடு கம்பில் மேய்ந்த மாதிரி, 40 நாட்களுக்கு பிறகு மதுபானம் வாங்கும் ஆர்வத்தில் மதுப்பிரியர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் மது வாங்கிச்சென்றனர். தனிமனித இடைவெளியை பின்பற்றாததற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 9ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில்,  டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் கூடியதே தவிர, இனிமேல் அந்தளவிற்கு கூட்டம் இருக்காது என தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது. 

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்தது. அதுமட்டுமல்லாமல், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஆதார் அட்டை அவசியம் என்று உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டையும் தளர்த்தியது. டாஸ்மாக் கடைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் முடிவுகளை மாநில அரசே எடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.