Asianet News TamilAsianet News Tamil

வெளி நபர்கள் தலையீடு அவசியமில்லை என்றால் ஊடகத்தில் ஏன் வெளிப்படையாக விவாதித்தார்கள்?!

supreme court bar association scba president vikas singh meets chief justice of india cji dipak misra
supreme court bar association scba president vikas singh meets chief justice of india cji dipak misra
Author
First Published Jan 15, 2018, 2:43 PM IST


தங்கள் பிரச்னைகளை வெளி நபர்கள் தலையிட்டு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை; நீதிமன்ற நிர்வாகத்தின் மூலமே பிரச்சினை தீர்த்துக் கொள்ளப்படும் என நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். அப்படி என்றால், ஊடகங்களைக் கூட்டி பொதுவெளியில் தங்கள் பிரச்னைகளை முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் நால்வரும்  இரு தினங்களுக்கு முன்னர் போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார், என்று செய்தியாளர்களிடம் கூறினர். உச்ச நீதிமன்ற வரலாற்றில் இப்படி பொதுவெளியில் ஊடகங்கள் முன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வந்து பொதுவெளியில் குற்றம் சாட்டியது இதுவரை இல்லாத ஒன்று. இதனைக் கண்டு, ஒட்டு மொத்த நாடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. பொதுவெளியில் இது போன்ற குற்றச்சாட்டுகள், ஊடகங்கள் முன் வந்துவிட்டதால், இது குறித்த விவாதங்களும் பொதுப்படையாக நடைபெற்று வருகின்றன. உண்மையில் உச்ச நீதிமன்றத்தில் என்னதான் நடக்கிறது என்று, அது தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை பார் கவுன்சில் களத்தில் இறங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மனப் பிணக்கை விசாரித்து, சமரசத் தீர்வு காண முயற்சி மேற்கொண்டது.  அதிருப்தி அடைந்துள்ள நீதிபதிகளுடன் சமரசம் பேச 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. இந்த 7 பேர் அடங்கிய சமரச குழுவினர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேசினர்.  

இதற்கிடையே அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி செலமேஸ்வரை அவரது இல்லத்தில் பார் கவுன்சில் குழு சந்தித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஏனைய மூத்த நீதிபதிகளையும் பார் கவுன்சில் குழு சந்தித்து பேசவுள்ளதாகக் கூறப்டுகிறது. 

இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக நீதிபதி குரியன் ஜோசப் கூறுகையில், இந்த விவகாரத்தில் வெளி நபர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற நிர்வாகத்தின் மூலமே பிரச்சினை தீர்த்து கொள்ளப்படும் என்றார்.

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சந்தித்துப் பேசினார். புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில், நீதிபதிகளின் திடீர் போர்க்குரலில் அரசியல் இருப்பதாக தில்லி வட்டாரங்கள் கிசுகிசுத்தன. என்னதான் மத்திய அரசு, நிலைமையைக் கண்காணிக்கிறோம் என்று கூறி ஒதுங்கி இருந்தாலும், ஏதாவது பிரச்னை இருந்தால் தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளாமல், பொதுவெளியில் ஊடகத்தின் முன் வந்து நான்கு நீதிபதிகளும் சொன்னதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவே பொதுவாகக் கூறப்படுகிறது. எனவே இந்த நான்கு நீதிபதிகள் விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அரசியல் மட்டத்தில் கோரிக்கை எழுந்து வருகிறது. 

இருப்பினும், திங்கள் கிழமை இன்று காலை உச்ச நீதிமன்ற அலுவல்கள் துவங்கிய போது, வழக்கமாக தலைமை நீதிபதி மிஸ்ரா தன் அலுவல்களைப் பார்க்க கிளம்பிவிட்டார். நான்கு நீதிபதிகளும் வழக்கம் போல் தங்கள் பணிகளை இன்று காலை துவங்கினர். எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடப்பதாகக் கூறப்பட்டது. இதன் பின்னணியில் பார் கவுன்சில் இருந்துள்ளது என்றும், தற்போதைக்கு பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப் பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios