மத அடிப்படையிலான தீவிரவாதத்தை ஒடுக்குங்க.. இந்து இளைஞர் கொலைக்காக கொதித்த அமைச்சர் மனோ தங்கராஜ்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்றும் மத அடிப்படையிலான தீவிரவாத செயல்களை பாரபட்சமின்றி மத்திய அரசு ஒடுக்க வேண்டுமென்றும் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்
.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்றும் மத அடிப்படையிலான தீவிரவாத செயல்களை பாரபட்சமின்றி மத்திய அரசு ஒடுக்க வேண்டுமென்றும் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மதத்தின் பெயரால் இந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய கருத்து சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரின் இந்தப் பேச்சுக்கு இந்தியா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய அரபு நாடுகள் வலியுறுத்தி வந்தன. அதே நேரத்தில் நுபர் சர்மாவின் பேச்சைக் கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன. இது ஒருபுறம் உள்ள நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வருகின்றனர். நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதம்பூர் மாவட்டம் மால்டா பகுதியை சேர்ந்த டைலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஜவுளிக்கடைகள் அத்துமீறி புகுந்த மர்ம நபர்கள் இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். அதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது, இதைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்ணையா லால் என்பதும், இவர் அப்பகுதியில் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்த தொழிலாளி என்பதும் தெரிந்தது. இளைஞரை மிகக் கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் அதுகுறித்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களுக்கு இது தான் கதி என்றும் அதில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காண்பித்து எச்சரித்தனர்.
இதன் எதிரொலியாக பல இடங்களில் போராட்டம் வெடித்தது, வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தது, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலைக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொலைச் சம்பவத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ள அவர், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.
உதய்பூரில் நடந்த கொலை சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சமய சகிப்புத்தன்மை குறைந்து வருவது வேதனைக்குரியது, மத அடிப்படையிலான தீவிரவாத செயல்களில் பாரபட்சமின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டில் அமைதி நிலவ மத அடிப்படையிலான வெறுப்பு பிரச்சினைகளை அனைவரும் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.