குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பெங்கய்யா நாயுடுவை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் ஆதரிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அவரை டி.டி.வி.தினகரன் அணியும் ஆதரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த பதவிக்கான தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.இந்த தேர்தலில் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக. புரட்சித்தலைவி அம்மா அணியும், அதிமுக அம்மா அணியும் அறிவித்திருந்தது.

ஆனால் அதிமுக  அம்மா அணியிலும் தற்போது எம்எல்ஏக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது.


இந்நிலையில், பெங்களூர் சிறைச்சாலையில் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை இன்று சந்தித்த டி.டி.வி. தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்..

அப்போது, குடியரசு துணைத் தலைவ்ர் தேர்தலில் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலலாவின் உத்தரவின்பேரில் ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.