பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; ஏழைக் குடும்பத்தில் பிறந்து எத்தனையோ துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து எம்பிபிஎஸ் படித்து. டாக்டர் பட்டம் பெற்று, அரசு மருத்துவமனையில் தனது வேலையை ராஜினாமா செய்து ஏழை மக்களுக்காக உதவும் வகையில், தனது சொந்த மருத்துவமனையை தொடங்கி எத்தனையோ ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து அனைவரின் ஆதரவையும் பெற்று பிரபலமாகி அரசியலில் காலெடுத்து வைத்த ராமதாஸ் அய்யா அவர்கள் அன்று முதல் இன்று வரை அவருக்கு என்று ஒரு தனி இடத்தை மக்கள் மத்தியிலும், அரசியல் உலகிலும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்று சொல்வார்கள். அந்த கோபக்கார மருத்துவர் அய்யாவின் அரசியல் சார்ந்த அறிக்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஞாயமான கேள்விகளும், அந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களும் தொலைநோக்குப் பார்வையும், பண்டிதனுக்கு மிக எளிதாக புரியும்படி இருக்கும். இவ்வாறான செயல்களால் தமிழ் மக்கள் நலனில் அவர் எவ்வளவு அக்கறை உள்ளவர் என்பது நன்றாகப் புலப்படுகிறது. 

அவருடைய ஒவ்வொரு அறிக்கையையும் நான் அக்கறையோடும் கவனத்துடன் படிப்பேன். 80 ஆண்டுகள் நிறைவுற்ற மரியாதைக்குரிய மருத்துவர் அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், மனநிம்மதியுடனும் இருந்து மக்களுக்கு பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.