நாமக்கல் மக்களைவைத் தொகுதியில் இருந்து திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கொங்கு தேசிய கட்சி எம்.பி.யாக இருப்பவர் ஏ கே பி சின்ராஜ் . நேற்று நாமக்கல் மாவட்டம் மோகனூரில் லாரி லாரியாக மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  எம்பி ஏ கே பி சின்ராஜ் அங்கே சென்றார். அதில் ஒரு லாரியை நிறுத்திய  எம்.பி. லோடு முழுவதும் மூடப்பட்டிருந்த நிலையில் லாரிக்குக் கீழே அப்படியே மணலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

அந்த லாரியை ஓரங்கட்டிவிட்டு மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு வரவழைத்தார். அவர் வருவதற்குள் அந்த லாரி பற்றிய விவரங்களை விசாரித்து முடித்துவிட்டார் .

மேலும் லாரி டிரைவரிடம் இருந்த இரண்டு டோக்கனை வாங்கி வைத்துக் கொண்ட சின்ராஜ், இன்ஸ்பெக்டரிடம், “இவ்வளவு மணல் கடத்தல் நடந்துக்கிட்டிருக்கு. என்ன பண்றீங்க நீங்க” என்று கேட்க, ‘சார்... அது திருச்சி மாவட்டம் உன்னியூர் யாடுலேந்து வருது. அத நாம ஒண்ணும் பண்ண முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் பாக்கணும்’ என்றார்.

அதற்கு எம்பி, ‘ஏன் சார்.. திருச்சியிலேர்ந்து கஞ்சாவை கடத்திக்கிட்டு இந்த ஊர் வழியா போறான். உங்களுக்கு தகவல் தெரியுது. திருச்சியிலேர்ந்துதான வருதுனு விட்டுடுவீங்களா? என்று வறுத்தெடுத்துவிட்டார்.

முதல்ல எஃப்.ஐ.ஆர். ஃபைல் பண்ணுங்க. வண்டிய சீஸ் பண்ணுங்க. வண்டி ஓனரை ரிமாண்ட் பண்னுங்க. ஒரு ஆளுக்கு எதுக்கு ரெண்டு பர்மிட்?” என்று விளாசியவர், நான் உங்களுக்கு இன்ஸ்பெக்டர்னு மரியாதை கொடுக்கிறேன். நீங்க எம்.பினு மரியாதை கொடுங்க” என்று இன்ஸ்பெக்டரை வறுத்து எடுத்துவிட்டார்.

அத்தோடு விடாமல் அந்த பிடிபட்ட டிரைவரை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று எம்.பி.யே விசாரித்தார். என் தொகுதிக்குள்ள சட்ட விரோதமா நடக்குற யாரையும் தூங்க விடமாட்டேன். வண்டிய சீஸ் பண்ணி ஓனரை ரிமாண்ட் பண்ணுங்க என்று உத்தரவிட்டு வெளியே வந்தார் சின்ராஜ். சின்ராஜின் இந்த நடவடிக்கையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.